Latestமலேசியா

மைகார்டு தொழில்நுட்ப பலவீனம்: மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை.30- மைகார்டு எனப்படும் நாட்டின் அடையாள அட்டையை தயாரிக்கும் தொழில்நுட்பம் மறுபரிசீலனைச் செய்யப் பட வேண்டும் என்று கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமல்லாது, மை-கார்டுகள் விநியோகம் குறித்து பல புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளதைத் தொடர்ந்து, முன்னாள் விநியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“மை-கார்டுகளை தயாரிப்பதற்கான தரம் குறைந்த தொழில்நுட்ப கருவிகளை, முந்தைய அரசாங்கத்திடம் சில அரசியல்வாதிகள் விற்பனை செய்து அதன் வாயிலாக லாபம் அடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அந்தத் தரம் குறைந்த மை-கார்டுகளை ‘குளோனிங்’ செய்து சிலர் லாபம் திரட்டி வந்தனர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

“இதில் சம்பந்தப் பட்டவர்கள் தவறேதும் இழைக்காத பட்சத்தில், அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்ற அடிப்படையில், அந்த விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும்” என்று லிம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மை-கார்டு விநியோகம் தொடர்பிலான டெண்டர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்பதைத் தொடர்ந்து, சில அதிகாரிகள் தம்மை தொடர்பு கொண்டு, மை-கார்டு தொழில்நுட்பம் குறித்து புகார் கொடுத்ததாக லிம் தெரிவித்துக் கொண்டார்.

பல்நோக்கு வகையில் செயல்படும் மை-கார்டுகள் மீண்டும் அறிமுகப் படுத்தப் பட வேண்டும் என்று அந்த அதிகாரிகள் விரும்புவதாக அவர் கூறினார்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் தேசிய பதிவுத் துறையால் அறிமுகப் படுத்தப் பட்ட, கணினி சிப் பொறிக்கப் பட்ட அடையாள அட்டைகள் குறித்து அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

அந்தக் கணினி சிப் செயலிழந்து போவது தொடர்பில் பல்வேறான புகார்களை தாம் பெற்றுள்ளதாக லிம் தெரிவித்துக் கொண்டார். அதன் அடிப்படையில், அந்தத் தொழில்நுட்பம் மறுபரிசீலனை செய்யப் பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker