Latestமலேசியா

சாக்கு போக்கு சொல்வதா? வான் அஸீஸாவுக்கு லத்தீபா கண்டனம்

கோலாலம்பூர், ஆக.1- கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயது ஆடவன், 11 வயது சிறுமியை திருமணம் செய்துக் கொண்டது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸீஸா சாக்குப் போக்கு சொல்கிறார் என்று ‘லாயர்ஸ் ஃபோர் லிபர்டி’ அமைப்பு சாடியுள்ளது.

அவ்விவகாரம் தொடர்பில் மேலும் சில ஆதாரங்கள் தேவைப் படுகிறது என்றும், அது குறித்து தாம் தொடர்ந்து சட்டத்துறை தலைவர் அலுவலகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக நேற்று வான் அஸீஸா தெரிவித்தார்.

“இன்னும் என்ன ஆதாரத்திற்காக அவர் காத்திருக்கிறார் என்று எங்களுக்குப் புரியவில்லை. அச்சிறுமி 7 வயதை அடைந்த காலக் கட்டத்திலேயே அவளை திருமணம் செய்துக் கொள்ள தாம் ஆசைப் பட்டதாக அந்த ஆடவன் தெரிவித்துள்ளான்.

“இதன் வாயிலாக, அவன் அச்சிறுமியின் மீது காமம் கொண்டுள்ளான் என்பது தெரிய வந்துள்ளது. இதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவன் மீது நடவடிக்கை எடுக்க இன்னும் என்ன ஆதாரம் தேவை?” என்று சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் லத்தீபா கோயா அறிக்கை ஒன்றின் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஆதாரங்கள் கண் முன்னே இருக்கும் போது, நடவடிக்கை எடுக்காமல், அஸீஸா ஏன் சாக்கு போக்கு கூறுகிறார். மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டு அமைச்சரான வான் அஸீஸா கூறுவது போல், அவ்விவகாரம் சிக்கலான விவகாரம் அல்ல” என்று லத்தீபா விளக்கினார்.

2017-ஆம் ஆண்டின் பாலியல் குற்றங்களுக்கான எதிர்ப்பு சட்டத்தின் கீழ், ஒருவரை பாலியலுக்காக தயார் படுத்துவது குற்றமாக கருதப்படுகிறது.
வான் அஸீஸா தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சரிவர செய்யாமல், அதனை சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் பொறுப்பில் விடுவது தவறென்று லத்தீபா கூறினார்.

“சட்டத்துறை தலைவர் நாடாளுமன்றத்திற்கு வர முடியாது. அதனால், அந்த ஆடவன் மீது சட்டநடவடிக்கை இன்னும் ஏன் எடுக்கப் படவில்லை என்பது குறித்து துணைப் பிரதமர் தான் விளக்கமளிக்க வேண்டும். அவர் அவ்விவகாரம் குறித்து இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker