Latestமலேசியா

திரையரங்க ஊழியரிடம் துப்பாக்கி காட்டிய ஆடவர் கைது

கோலாலம்பூர்,ஆகஸ்டு.2- டாமான்சாரா உத்தாமாவில் உள்ள ஒரு பேரங்காடியில் திரையரங்க ஊழியர் ஒருவரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய அரசாங்க அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அச்சம்பவம் நேற்று முன்தினம் மதியம் 2.45 மணி அளவில் நிகழ்ந்தது. தொடக்கத்தில் திரையரங்கிற்குள் நுழைய முனைந்த ஆடவர் ஒருவருக்கு ஊழியர்கள் அனுமதி தரவில்லை. அப்போது அவ்வாடவனின் நண்பர்களான ஒரு பெண்ணும் ஓர் ஆடவரும் மூர்க்கத்தனமாக அங்கிருந்த திரையரங்க ஊழியரின் முகத்தில் குத்தியுள்ளனர். சற்று நேரத்தில் அவ்விடத்திற்கு விரைந்த திரையரங்க மேலாளர் ஒருவர் அவர்களைத் தடுத்துள்ளார்.

பிறகு தன்னை முதலாளி எனக் கூறிக் கொண்ட மற்றோர் ஆடவர் தன்னிடமிருந்த துப்பாக்கி ஒன்றை திரையரங்க ஊழியர் ஒருவரிடம் காட்டி மிரட்டியுள்ளார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துப்பாக்கி ஏந்திய ஆடவரை கைது செய்ததோடு 13 தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கி,துணிகள் கொண்ட ஒரு பையையும் கைப்பற்றினர்.

அச்சம்பவத்தை உறுதி செய்த சிலாங்கூர் குற்றவியல் புலனாய்வுத் துறை தலைவர் பாட்சில் அகமட், கைது செய்யப்பட்ட ஆடவர் நேற்று இரவு 7 மணி அளவில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக கூறினார். போலீசார் இவ்வழக்கை குற்றவியல் சட்டம் பிரிவு 506, மற்றும் 323-இன் கீழ் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker