Latestமலேசியா

தேசிய சேவை திட்டம் புதுப்பிக்கப் படலாம்! –மாட் சாபு

கோலாலம்பூர், ஆக.2- பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி அமைத்தால், தேசிய சேவை பயிற்சி திட்டம் ரத்து செய்யப் படும் என்று பக்காத்தான் ஹராப்பான் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டதற்கு எதிர்மாறாக, அப்பயிற்சி சேவை திட்டம் புதுப்பிக்கப்படலாம் என்று தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

அப்பயிற்சி திட்டம் தொடரப்பட வேண்டும் என்று பல இளைஞர்களின் பெற்றோர்கள், தேசிய பயிற்சி சேவை திட்டத்தின் முன்னாள் பயிற்சியாளர்கள், அது சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று தற்காப்பு அமைச்சர் கூறினார்.

அக்கருத்துகளை தொடர்ந்து, அத்திட்டத்தின் செயல்திறன் மற்றும் தாக்கம் குறித்து அறிந்துக் கொள்ளும் முயற்சியில் தற்காப்பு அமைச்சு ஈடுபட்டுள்ளது என்று அவர் நாடாளுமன்றத்தில் சொன்னார்.

அத்திட்டம் சில பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப் பட்டதாகவும், அதன் வாயிலாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் நல்ல மாற்றங்கள் தென்பட்டதாக அப்பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன என்று மாட் சாபு கூறினார்.

இருந்த போதிலும், அத்திட்டத்தை செயல்படுத்த அதிகச் செலவு ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் பயன்படுத்தப் படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“கடந்த 14 ஆண்டுகளில், தேசிய பயிற்சி சேவை திட்டத்திற்கு ரிம.8 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது. அந்தத் தொகையில் 43% தொகை, முகாம்களின் வாடகைக்கு பயன்படுத்தப் பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, வழங்கப் படும் சேவைக்கான போக்குவரத்து செலவும், சற்று அதிகமாகவே உள்ளது” என்று அவர் விவரித்தார்.

அத்திட்டம் தொடர்பிலான ஆய்வு, அமைச்சரவையில் கூடிய விரைவில் சமர்ப்பிக்கப் படும் என்று அவர் குறிப்பிட்டார். “அத்திட்டத்திற்கான செலவுகள் கட்டுப்படுத்தப் பட்டு, பயிற்சிகள் மேம்படுத்தப் பட்டால் மட்டுமே அத்திட்டம் புதுப்பிக்கப் படும்” என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker