Latestமலேசியா

70 ஆண்டுகளாக தொடரும் காதல்; மனம் திறந்தார் மகாதீர்!

கோலாலம்பூர், ஆக.3- சிங்கப்பூரிலுள்ள மருத்துவக் கல்லூரியில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் நட்பாகி, அதன் பின்னர் காதல் வயப்பட்டு, திருமணம் புரிந்துக் கொண்டு, இன்று வரை தனது துணைவியாரோடு மிக நேசமாக வாழ்ந்துக் கொண்டிருப்பது குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அண்மையில் சி.என்.என் எனும் தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

சிங்கப்பூரிலுள்ள ஏழாவது கிங் எட்வட்ர்ஸ் மருத்துவ கல்லூரியில், 1946-ஆம் ஆண்டு தான் மகாதீர் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவை முதலில் சந்தித்தார். 10 ஆண்டுகளுக்குப் பின்னர், அரசாங்க மருத்துவமனையில் மருத்துவர்களாக பொறுப்பேற்ற பின்னர், அவ்விருவரும் திருமணம் புரிந்துக் கொண்டனர்.

கடந்த மே மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மகாதீர் அரசியல் பிரவேசம் செய்து வெற்றி பெற்றது குறித்து பலர் இதுவரை பிரமிப்பாக பேசி வருகிற வேளையில், மகாதீரும் அவரின் துணைவியாரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொண்ட புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது.

“எங்கள் மருத்துவக் கல்லூரியில் அதிகப் பெண்கள் பயிலவில்லை. சித்தி ஹஸ்மா மட்டும் தான் மருத்துவம் பயின்று வந்த. அவர் மட்டும் தான் மலாய் பெண்மணி. அதனால் அவர் மீது எங்கள் அனைவருக்கும் தனிப் பிரியம் இருந்தது. நாளடைவில் அது எனக்கு காதலாக மாறியது” என்று மகாதீர் தெரிவித்தார்.

“அந்தக் காலத்தில் எந்தப் பெண்ணும் மருத்துவம் பயில முன்வரவில்லை. ஆனால், ஹஸ்மா மட்டும் அதற்கு நேர்மாறாகத் திகழ்ந்தார். அது, அவரின் மன வலிமையை உணர்த்துகிறது” என்றார் அவர்.

தாங்கள் இருவரும் காதலராக இருந்த சமயம், தங்கள் இருவருக்கும் பலமுறை கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

“நான் காலந் தவறாமையை கடைப்பிடிப்பேன். ஹஸ்மா குறிப்பிட்ட நேரத்திற்கு வர மாட்டார். அதனால் எங்களுக்குள் பலமுறை வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. ஒரு காலக் கட்டத்தில் எங்களுக்குள் உள்ள வேற்றுமையை மாற்ற முடியாது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதன் பின்னர், அந்த வேற்றுமையை சுதாரித்துக் கொண்டு வாழ நாங்கள் பழகிக்கொண்டோம்” என்று மகாதீர் சொன்னார்.

“நேர்மை, நாட்டிற்காக உழைப்பது, போன்றவற்றில் எனக்கு மட்டும் ஈடுபாடில்லை. ஹஸ்மாவும் அந்தக் கொள்கைகளைக் கொண்டிருந்தார். அதனால் தான் எங்களின் உறவு இதுவரை நீடித்து வருகிறது. நாட்டுப் பற்று எனக்கு மட்டுமல்ல. அவருக்கும் உண்டு. அதனால் தான், ஹஸ்மா என்னுடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்வார்” என்று மகாதீர் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker