Latestமலேசியா

அன்வாருக்கு தனது தொகுதியை விட்டுக் கொடுப்பாரா பிரபாகரன்?

கோலாலம்பூர், ஆக். 7- பி.கே.ஆர். தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம், அடுத்த இடைத்தேர்தல் ஒன்றில் போட்டியிடக் கூடும் என்ற நிலையில், செலாயாங் அல்லது பத்து நாடாளுமன்றத்தில் அவர் போட்டியிட வழிவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குள் பிரதமர் பதவியை துன் மகாதீரிடமிருந்து அன்வார் ஏற்றுக் கொள்வார் என்பது முன்பே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்நிலையில் அன்வாரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினறான 22 வயதுடைய பி.பிரபாகரன் அல்லது செலாயாங் தொகுதியின் எம்.பி.யான வில்லியம் லியோங் ஆகிய இருவரில் ஒருவர் தங்களுடைய தொகுதியை அன்வாருக்கு விட்டுக் கொடுப்பார்கள் என்ற ஆருடங்கள் நிலவுகின்றன.

அன்வார் கேட்டுக் கொண்டால் தம்முடைய தொகுதியை தாம் விட்டுக் கொடுக்கத் தயார் என்று செலாயாங் எம்.பி வில்லியம் லியோங் தெரிவித்தார்.

அதேவேளையில் பாண்டான் தொகுதியை டத்தோஶ்ரீ வான் அஸிசாவோ அல்லது பெர்மாத்தாங் பாவ் தொகுதியை நூருல் இஸாவோ விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்று ஏற்கெனவே அவர்கள் அறிவித்துள்ளனர்.

எனினும், வில்லியம் லியோங் தமது தொகுதியை விட்டுக் கொடுப்பதற்கு கட்சி வட்டாரத்தில் ஆதரவில்லை. ஏனெனில் இவர் 2008 ஆம் ஆண்டிலிருந்து இத்தொகுதியில் எம்.பியாக இருந்துவரும் மூத்த அரசியல்வாதி ஆவார்.

அந்த வகையில் பிரபாகரன் தமது தொகுதியை விட்டுக் கொடுக்க முன்வந்தால் அதை கட்சி வரவேற்கும் என்று பி.கே.ஆர் வட்டாரங்கள் கூறின. ஏனெனில், பிரபாகரன் ஓர் இளைஞராவார். இன்னமும் அவர் படித்துக் கொண்டு இருக்கிறார்.

எனினும், அவர் தமது தொகுதியை விட்டுக் கொடுப்பாரா? என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில் அன்வாருக்கு எந்தத் தொகுதி விட்டுக் கொடுக்கப்படும் என்பது தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆருடங்கள் நீடிக்கும் என்றே தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker