Latestஇந்தியா

கருணாநிதி உடல்நிலை; அவசர ஆலோசனை: சென்னை முழுவதும் போலீஸ் குவிப்பு!

சென்னை, ஆகஸ்ட். 7- முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு கண்டு வருவதால் சென்னை மாநகர் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு அமல்படுத்தப் பட்டுள்ளது.

கடந்த 11 நாள்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 24 மணிநேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது.

அவரது மனைவி தயாளு அம்மாள் உள்பட அவருடைய குடும்பத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக மருத்துவமனையில் குவிந்திருக்கும் நிலையில் தொண்டர்கள் மத்தியில் பதட்டம் அதிகரித்து வருகிறது.

மருத்துவமனை வளாகத்தில் தொண்டர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து கட்டுங்கடங்காத நிலை ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையின் முக்கிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துப் போலீஸ் அதிகாரிகள் இடையே பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் போலீஸ் விழிப்புநிலை உச்சக்கட்டத்தில் இருக்கிறது.

இதனிடையே குடும்பத்தினருடன் தீவிர கலந்தாலோசனையை நடத்திய ஸ்டாலின், பின்னர் தனது மூத்த சகோதரர் மு.க. அழகிரியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து அவசர ஆலோசனைகளை நடத்தினார்.

அதேவேளையில் கருணாநிதியின் இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது மேலும் மூச்சு விடுவதில் கடும் சிரமம் இருந்ததால் சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
அவரது கை மற்றும் கால்கள் மெல்ல செயலிழப்புத் தன்மையை அடைந்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker