Latestமலேசியா

50,000 துப்புரவு பணியாளர்களின் உரிமைகள் மீறல்- பிஎஸ்எம் சாடியது

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.9- நாடு முழுவதும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளிலும் கிளினிக்குகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதாக மலேசிய சோசியலிஸ்ட் கட்சி (பி.எஸ்.எம்.) சாடியுள்ளது.

துப்புரவு பணிகள் போன்று நிரந்தரமாகச் செய்ய வேண்டிய பணிகளுக்கு அரசாங்கம் குத்தகை முறையைக் கடைபிடிப்பது அநீதியானது மட்டுமல்ல அது சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளர்களின் உரிமையை மீறுவதும்கூட என பி.எஸ்.எம் கட்சியின் துணைத் தலைவர் எம்.சரஸ்வதி கூறினார்.

2015-ஆம் ஆண்டு முதல் ஐந்து அரசாங்க சார்பு நிறுவனங்களுக்கு பொது மருத்துவமனைகளிலும் கிளினிக்குகளிலும் துப்புரவு பணிக்கான குத்தகை வழங்கப்பட்டன. அந்நிறுவனங்களோ பிற தனியார் நிறுவனங்களுக்கு அப்பணியை ஈராண்டுகளுக்கு கீழ்க்குத்தகைக்கு விட்டுள்ளன. அதனால், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் 6 மாதம், ஓராண்டு, ஈராண்டு என்ற ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை வேலைக்கு எடுத்து வந்ததாக சரஸ் மேலும் குறிப்பிட்டார்.

குத்தகை முறையிலான இந்த துப்புரவு வேலைக்குப் எந்த விதத்திலும் பாதுகாப்பு இல்லை. ஒருவர் 20 ஆண்டுகளுக்கு மேல் துப்புரவு பணியாளராக இருந்தாலும் அவர் உள்நாட்டுத் தொழிலாளராக அங்கீகரிக்கப்படுவதில்லை. அவருக்கு சம்பள உயர்வே இருக்காது. அவருக்கு இபிஎப், சொக்சோ, மருத்துவ வசதி ஆகிய எந்தவொரு சலுகையும் முறையாகக் கிடைப்பதில்லை.

இதெல்லாம் போக, ஈராண்டுக்கு ஒரு முறை குத்தகையாளர்கள் மாறுவதால், மருத்துவ விடுமுறை, வருடாந்திர விடுமுறை, வருடாந்திர போனஸ், வேலை நிறுத்த இழப்பீடு போன்ற எதும் அப்பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என சொன்னார் சரஸ்.

இதனிடையே, துப்புரவு பணியாளர்களின் உரிமையை மீறும் தே.மு அரசு கொண்டு வந்த இந்த குத்தகை அடிப்படையிலான வேலையை ஒரு நிறைவுக்குக் கொண்டுவந்து, அவர்களை நிரந்தர அரசு பணியாளர்களாக பணிக்கமர்த்த வேண்டும் என சரஸ் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker