Latestமலேசியா

பள்ளியில் கொதிக்கும் நீர் ஊற்றி மாணவர் படுகாயம்

சித்தியவான்,ஆகஸ்ட்.10- சித்தியவானிலுள்ள மஹா கணேச வித்யாசாலை தமிழ்ப்பள்ளியின் ஆய்வுக்கூடத்தில் அறிவியல் பாடத்தின்போது எலட்ரிக் கேட்டலில் கொதிக்க கொதிக்க இருந்த சுடுநீர் ஊற்றியதில் இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன் தினம் காலை 10-லிருந்து 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்துள்ளது.

எல்.டர்ஷாந்த் என்ற 8 வயது மாணவருக்கு கழுத்தில் இருந்து கால் வரை மிக மோசமாக காயம் ஏற்பட்டுள்ளது. மாறாக, மற்ற மூன்று மாணவர்களுக்கு டர்ஷாந்தை போல் மோசமான காயம் இல்லை என கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது தாம் ஜொகூரில் இருந்ததாகவும், தகவல் அறிந்து சித்தியவானுக்கு விரைந்து வந்ததாக டர்ஷாந்தின் தந்தை எம்.லோகநாதன் தெரிவித்தார். டர்ஷாந்தும் அவரது நண்பர்களும் ஶ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால், டர்ஷாந்த் பிறகு ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வேளை மற்ற மூன்று மாணவர்களும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தனது மகனின் வகுப்பில் பயிலும் மாணவர்களிடம் விசாரித்ததில், அந்த எலட்ரிக் கேட்டல் மாணவர்களின் நாற்காலிகளுக்கு முன் இருந்த மேசையில் இருந்ததாகவும், அந்த கேட்டல் தவறி விழுந்ததில் சுடுநீர் மாணவர்களின் மீது ஊற்றியதாக தெரியவந்ததாக லோகநாதன் குறிப்பிட்டார். ஆனால், இது குறித்து பள்ளி தரப்பினரிடம் கேட்டால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது அவர்கள் பழி போடுவதாக அவர் சொன்னார். அதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் சுங்கை செனாம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

‘என்னதான் பள்ளி தரப்பினர் மன்னிப்பு கேட்டாலும், இந்த விவகாரத்தில் அவர்கள் அலட்சியமாக இருந்தது தவறு’ என லோகநாதன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். மேலும் சம்பவம் நிகழ்ந்து 30 மணி நேரம் ஆகியும் பள்ளி தரப்பினர் அவர்களாகவே தன்னை தொடர்பு கொள்ளவே இல்லை எனவும் அவர் விவரித்தார்.

இதனிடையே, இந்த விவகாரத்தை கல்வி அமைச்சு விசாரிக்க வேண்டும் என லோகநாதன் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker