Latestமலேசியா

‘பி-40’ வறுமைக் குடும்பங்களுக்கு இலவச சுகாதார காப்புறுதி!

கோலாலம்பூர், ஆக.10- வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான இலவச சுகாதார காப்புறுதி திட்டம், இவ்வாண்டின் இறுதியில் அமலுக்கு வரும் என்று சுகாதார அமைச்சு நம்பிக்கை தெரிவித்தது.

மலேசியர்களில் 30 விழுக்காட்டினர் மட்டுமே சுகாதார காப்புறுதியை வைத்துள்ளனர். 15 விழுக்காட்டினர் சொந்த மருத்துவ திட்ட காப்புறுதியை வாங்கியுள்ளனர். 10-திலிருந்து 15 விழுக்காட்டினரின் சுகாதார காப்புறுதியை, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

“என்றாவது ஒரு நாள், மலேசியர்கள் அனைவருக்கும் இலவச காப்புறுதியை வழங்க வேண்டிய அவசியம், அரசாங்கத்திற்கு ஏற்படும். அதற்கு வழிவகுக்கும் வகையில், பி-40 வறுமை கோட்டின் கீழுள்ள குடும்பங்களுக்கு, இலவச சுகாதார காப்புறுதியை வழங்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம்” என்று சுகாதார அமைச்சின் துணையமைச்சர் டாக்டர் லீ பூன் சேய் கூறினார்.

“மலேசியர்கள் அனைவருக்கும் இலவச சுகாதார காப்புறுதிகளை வழங்க அரசாங்கம் முயற்சிக்கும். இருந்த போதிலும், அதற்காக செலவுகளை ஏற்றுக் கொள்வது யார் குறித்து முதலில் முடிவு எடுக்கப் பட வேண்டும்.

“ரிம.10,000 செலவிலான சுகாதார காப்புறுதியால் பலருக்கு நன்மை ஏற்படாது. ஆதலால், இந்தக் காப்புறுதிகளை வழங்கும் பங்குத்தாரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப் பட வேண்டும்” என்று அவர் சொன்னார்.

மருத்துவச் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக மலேசியர்கள் அதிக தொகையை செலுத்தி வருகின்றனர். ஆண்டு தோறும், அச்சேவைக்கான செலவுகள் 10-திலிருந்து 15 விழுக்காடு வரை அதிகரித்துக் கொண்டிருப்பதால், மலேசியர்கள் பலர் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

“மருத்துவச் சேவைக்கான செலவுகளை குறைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஹெபடிடிஸ் சி சிகிச்சைக்கான செலவுகளை அரசாங்கம் பல மடங்கு குறைத்துள்ளது. ஆனால், புற்றுநோய் போன்ற நோய்க்கான செலவுகளை கட்டுப்படுத்துவது சிரமமான காரியமாக உள்ளது” என்று பூன் சேய் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker