Latestமலேசியா

SST வரி மசோதாவை செனட் தடுக்க முடியுமா? – டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், ஆகஸ்ட்.11- மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள எஸ்.எஸ்.டி. (SST) எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி சட்ட மசோதாவை எதிர்க்கட்சியான தேசிய முன்னணியின் பெரும்பான்மைமிக்க டேவான் நெகாராவில் (செனட்) தடுக்கும் முயற்சிகள் நடக்கும் என்றாலும், அதில் எதிர்த் தரப்பினர் வெற்றி பெறமுடியாது என்று டேவான் நெகாரா தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பக்காதான் ஹராப்பான் அரசங்கம் கொண்டுவரும் எஸ்.எஸ்.டி வரிச் சட்ட மசோதா, அடுத்து டேவான் நெகாராவில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. ஆனால் டேவான் நெகாராவில் தேசிய முன்னணி செனட்டர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்கள் இந்த மசோதாவை எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களால் இந்த மசோதா நிறைவேற்றுவதைத் தாமதப்படுத்தலாமே தவிர, முற்றாக தடுத்து விட முடியாது என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
இது, மற்ற மசோதாக்களை போன்றல்ல. நிதி சார்ந்த மசோதாக்கள் மாறுபட்டவை என்றார் அவர்.

எஸ்.எஸ்.டி. சட்ட மசோதா, டேவான் நெகாராவில் அங்கீகாரம் பெற முடியாமல் போனாலும், நாடாளுமன்ற நடைமுறை மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் பார்க்கும் போது நேரடியாக மக்களவை (டேவான் ரயாட்)) அந்த மசோதாவை மாமன்னரின் அங்கீகாரத்திற்கு கொண்டு செல்லலாம்.

மக்களவை மசோதாவை நிறைவேற்றிய பின்னர் 30 நாள்களில் மாமன்னரின் அங்கீகாரத்திற்கு அதனைக் கொண்டு செல்ல முடியும் என்று டேவான் நெகாரா அவைத் தலைவரான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் விளக்கினார்.

டேவான் நெகாராவில் உள்ள 55 செனட்டர்களில் 32 தேசிய முன்னணி உறுப்பினர்கள், இதர மூவர் பாஸ் கட்சியினர். இவர்கள் எஸ்.எஸ்.டி. வரிச் சட்ட மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கப்பர் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர் மேற்கண்டவாறு விளக்கத்தை அளித்தார்.

கூட்டரசு அரசியல் அமைப்பு சட்டத்தின் 68ஆவது ஷரத்தின் கீழ், டேவான் ரயாட் மற்றும் டேவான் நெகாரா ஆகிய இரு அவைகளுக்கும் இடையே தீர்க்க முடியாத அளவுக்கு முரண்பாடு ஏற்படுமானால் டேவான் நெகாராவுக்கு கொண்டு செல்லாமலேயே, ஒருமாத காலக்கட்டத்தில் நிதிசார்ந்த மசோதாக்களை மாமன்னரின் இணக்கத்திற்கு டேவான் ரயாட் எடுத்துச் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தங்களின் அரசியல் நோக்கங்களுக்காக டேவான் நெகாராவை பயன்படுத்தாமல், நாட்டின் நலனுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்று விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் எஸ்.எஸ்.டி. சட்ட மசோதாவின் மீது டேவான் நெகாரா உறுபப்பினர்கள் சிறப்பான முறையில் விவாதம் நடத்தி, அண்மைய பொதுத்தேர்தலில் மக்களின் விருப்பம் பிரதிபலிக்கப்பட்டிருக்கும் அடிப்படைக்கு ஏற்ப ஒரு முடிவை எடுப்பார்கள் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker