Latestஉலகம்

விமானத்தை திருடி, ஓட்டிச் சென்ற ஊழியர்! விபத்தில் பலி!

வாஷிங்டன், ஆகஸ்ட்.12- அமெரிக்காவில் விமான ஊழியர் ஒருவர் பயணிகள் விமானத்தை திருடி ஓட்டிச் சென்ற போது அது கீழே விழுந்து நொறுங்கியதால் சம்பந்தப்பட்ட நபரும் உயிரிழந்தார்.

அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹாரிஷான் பயணிகள் விமானம் 9 பேர் பயணம் செய்யக் கூடிய விமானமாகும். அது, அமெரிக்காவின் சியேட்டல் அனைத்துலக விமான நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த விமானத்தின் பழுதுகளை சரி செய்யும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டு இருந்தார்.

ஆனால், திடீரென அந்த விமானத்தை அவர் திருடி, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓட்டிச் சென்றார். அந்த விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை இரு ‘எப் 15’ போர் விமானங்கள் பின்னாலே துரத்திச் சென்றன. ஆனால் அந்த விமானம் கெட்ரான் தீவில் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற மெக்கானிக் அங்கேயே பலியானார்.

அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து சியேட்டல் விமான நிலையம் சிறுது நேரம் மூடப்பட்டது. இதனால், பயணிகள் அவதிஅடைந்தனர். பின்னர் அந்த விமான நிலையம் வழக்கம் போல இயங்கத் தொடங்கியது.

விபத்துக்குள்ளான விமானத்தை அந்த நபர் ஓட்டிச் சென்றதையும் அதை போர் விமானங்கள் துரத்திச் சென்றதையும் பலரும் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இச்சம்பவம் நடந்ததன் பின்னணி என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அந்த ஊழியரின் பெயர் ரிச்சர்ட் ரஸல் என சக ஊழியர்கள் உறுதிப்படுத்தினர். இது போன்று கடத்தப்பட்ட விமானங்களை மோதச் செய்ததன் வழி தான் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கட்டடம் தகர்க்கப்பட்டது என்பதால் இச்சம்பவத்தை அமெரிக்கத் தற்காப்புத் துறை கடுமையாக கருதுகிறது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker