Latestமலேசியா

போலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்! – ஐ.ஜி.பி

கோலாலம்பூர், ஆக.14- தேசிய போலீஸ் படையில் நிலவும் ஊழல்களை முறியடிக்கும் பொருட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் பூஸி ஹரூண் கூறினார்.

ஊழல்களில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த 2016-ஆம் ஆண்டு 179-ஆக இருந்த வேளையில், கடந்தாண்டு அந்த எண்ணிக்கை 149-ஆக குறைந்துள்ளது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

“அந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளன. இருந்த போதிலும், எங்கள் மீதான தவறான கருத்துகள் தொடர்ந்து கொண்டே தான் உள்ளன. அதனால், ஊழலை போலீஸ் படையிலிருந்து முழுமையாக தடுக்கும் முயற்சியாக, அதில் சம்பந்தப் படுவோர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம்” என்றார் அவர்.

சாலை போக்குவரத்து, சட்டவிரோத சூதாட்டங்களை தடுக்கும் துறைகள் மீது மக்கள் அதிக அளவில் தவறான கண்ணோட்டம் கொண்டுள்ளனர் என்று பூஸி ஹரூண் தெரிவித்தார்.

“மாநில மற்றும் மாவட்ட போலீஸ் தலைவர்கள் பலர் ஊழல்களில் ஈடுபடுகின்றனர் என்று எங்களிடம் பலர் புகார் செய்துள்ளனர்” என்று அவர் சொன்னார்.

மூத்த அதிகாரிகள், போலீஸ் தலைவர்கள் போன்றோர் கடந்த சில வாரங்களாக பணி இடமாற்றம் பெற்றுள்ளதை சுட்டிக் காட்டி, ஊழலில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களின் மீது நிச்சயமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்பதை இதன் வாயிலாக பலர் அறிந்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

“இடமாற்றம் செய்யப் பட்ட பின்னரும், அப்போலீஸ் அதிகாரிகள் தங்களை மாற்றிக் கொள்ளாவிடில், அவர்கள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும்” என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker