
கோலாலம்பூர், ஆகஸ்ட்.15- குடியுரிமை தொடர்பாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ள முடிவானது, வு நாடற்றவர்களின் பிரச் னைகளுக்குத் தீர்வாக அமைந்து விடாது என்று ‘லாயர்ஸ் ஃபார் லிபர்ட்டி’ (Lawyers for Liberty) என்ற வழக்கறிஞர்கள் அமைப்பு தெரிவித்தது.
60 வயதுக்கு மேற்பட்ட நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்ததன் வழி அடையாள ஆவணப் பிரச்னைகளை எதிர்நோக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டனர் என்று அந்த அமைப்பு கூறியது.
இவ்விவகாரம் தொடர்பில் நேற்று பிரதமர் துன் மகாதீர் விடுத்த அறிவிப்பை வரவேற்ற ‘லாயர்ஸ் ஃபார் லிபர்ட்டி’ அமைப்பின் இயக்குனரான என்.சுரேந்திரன், எனினும் இது குடியுரிமை பெற இயலாமல் தவிப்போரில் ஒரு சிறிய தரப்பினருக்கு மட்டுமே பயனளிப்பதாக இருக்கிறது என்றார்.
குடியுரிமைக்கு ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள 60 வயதுக்கு மேலான சிவப்பு மைகாட் வைத்திருப்போருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று மகாதீர் நேற்று அறிவித்திருந்தார். இதன் வழி 3,407 இந்தியர்கள் குடியுரிமை பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
வெகுகாலமாக நீடித்து வரும் குடியுரிமைப் பிரச்னையில் இது ஒரு சிறு துளிதான் என்று சுரேந்திரன் வர்ணித்தார். சிவப்பு அடையாளக் கார்டு வைத்திருக்கும் 60 வயதுக்கு மேலான இந்தியர்களின் எண்ணிக்கை விவகாரத்தில் நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது. உண்மையான எண்ணிக்கை உள்துறை அமைச்சுக்கு தெரிந்தே இருக்கும்.
இவர்களுக்கு நீல அடையாளக்கார்டு கொடுத்து விட்டால், இந்த 3,407 பேருக்கு அப்பால் இருக்கும் ஆயிரக்கணக்கான நாடற்ற பிரஜைகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு பிறந்து விடாது என்று வழக்கறிஞர் சுரேந்திரன் விவரித்தார்.