Latestமலேசியா

தானியங்கி வாக்காளர் பதிவு முறையை அமல்படுத்துக! –பெர்சே

கோலாலம்பூர், ஆக.17- இன்னும் ஐந்து ஆண்டுகளில், நாட்டின் 15-ஆவது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், தானியங்கி வாக்களர் பதிவு முறை அமலுக்கு வர வேண்டும் என்று பெர்சே 2.0 அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின் போது, வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்வதில் பல்வேறான சிரமங்களை எதிர்நோக்கினர்.

அந்தச் சிரமங்கள் மீண்டும் தொடரா வகையில், தேர்தல் ஆணையம் இந்தத் தானியங்கி வாக்காளர் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று அவ்வமைப்பு வலியுறுத்தியது.

“அரசியலமைப்பு கோட்பாட்டின் படி, மலேசியாவில் ஜனநாயகம் நீடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கருதினால், இந்தப் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப் படுவதை அனுமதிக்க வேண்டும். புதிய, மாற்றங்களை காணுவதற்காக பல்லாயிரக் கணக்கான மலேசியர்கள் கடந்த பொதுத் தேர்தலில் வாக்களித்தனர்.

“இந்த நிலைமை தொடர வேண்டும் என்ற அடிப்படையில், தேர்தல் ஆணையம் தானியங்கி வாக்காளர் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும்” என்று பெர்சே 2.0 அமைப்பின் இடைக்கால தலைவர் ஷாரூல் அமான் கேட்டுக் கொண்டார்.

இதனிடையில், வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களில் 7,900 பேர் வாக்களிக்க பதிந்துக் கொண்டதாகவும், அவர்களில் 1,620 பேர் தங்களின் வாக்குகளை பதிவுச் செய்வதில் பல்வேறான சிரமங்களை எதிர்நோக்கினர்.

கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதியிலிருந்து மே 31-ஆம் தேதி வரை அவர்களிடம் நடத்தப் பட்ட ஆய்வின் வாயிலாக தெரிய வந்துள்ளது என்று குளோபல் பெர்சே அமைப்பின் செயலாளர் நிர்மலா தேவி கூறினார்.

“தங்களை வாக்காளர்களாக பதிவுச் செய்துக் கொள்ள 41.6 விழுக்காட்டினர் பல சிரமங்களை எதிர்நோக்கினர். தேவையான விவரங்களை தேர்தல் ஆணையமும், வெளியுறவு அமைச்சும் வழங்க தவறிவிட்டன” என்று அவர் தெரிவித்தார்.

“வாக்குகளைப் பதிவுச் செய்ய தங்களைப் பதிந்துக் கொண்டவர்கள், (முடிந்த) தேர்தலில் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனரா என்ற தகவலைக் கூட தேர்தல் ஆணையம் மற்றும் வெளியுறவு அமைச்சு பகிர்ந்துக் கொள்ளவில்லை. இது அவர்களின் கடமை இல்லையா?” என்று நிர்மலா கேள்வி எழுப்பினார்.

“வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்ட வாக்குச் சீட்டுகள் காலதாமதாக அவர்களை சென்றடைந்தது. அதனைப் பெற்றுக் கொண்டு, வாக்குகளை பதிவு செய்து, அச்சீட்டுகளை அவர்கள் மலேசியாவிற்கு திருப்பி அனுப்புவதற்குள், தேர்தல் முடிந்து விட்டது” என்று அவர் குறைப்பட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker