Latestமலேசியா

பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள்- சுங்கை சிப்புட் மக்கள் பேரா அரசுக்கு வலியுறுத்தல்

ஈப்போ,ஆகஸ்ட்.21- கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தாங்கள் பல்வேறு சமூக – பொருளியல் பிரச்சனைகளை எதிர்நோக்கி வருவதாகவும், அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் சுங்கை சிப்புட் மக்கள் மாநில அரசாங்கத்திடம் இன்று மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரான பி.எஸ்.எம் கட்சியின் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தலைமையில் அவர்கள் அந்த மகஜரை பேரா மந்திரி புசார் அகமட் பாய்சால் அஸுமுவின் பிரதிநிதியிடம் சமர்ப்பித்தனர்.

அடிக்கடி ஏற்படும் வெள்ளம், வாங்கும் சக்திக்குட்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் இல்லாமை, குறைந்த வருமானம் பெறுவோருக்கான குறைவான வேலை வாய்ப்புகள், பூர்வக் குடி மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுதல் ஆகிய பிரச்சனைகளை குறித்து அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவற்றைத் தவிர, புறம்போக்கு நில குடியிருப்புகள், கைவிடப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்த சம்பளம் ஆகியவை குறித்தும் அம்மகஜரில் பேசப்பட்டுள்ளது. அதோடு, சுங்கை சிப்புட்டில் ஒரு நூலகத்தை அமைக்க வேண்டும் எனும் கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்துள்ளனர்.

இது குறித்து பேசிய டாக்டர் மைக்கல் ஜெயக்குமார்,”இவை எல்லாம் புதிய பிரச்சனைகள் இல்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் பிரச்சனைகள். இது தொடர்பில் முன்னாள் மந்திரி புசார் டத்தோஶ்ரீ ஜம்ரி அஒதுல் கதிர் ஒரு முறை கூட எங்களை சந்திக்கவில்லை. அவருக்கு அனுப்பிய மகஜர் தொடர்பில் அவர் ஏதும் திரும்ப சொல்லவே இல்லை” என்றார்.

இந்நிலையில், தற்போதைய மந்திரி புசாராவது இந்த பிரச்சனைகள் குறித்து தங்களிடம் கலந்தாலோசிப்பார் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். வரும் ஞாயிற்றுக்கிழமை, அதே மகஜரை இப்போதைய சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனிடமும் வழங்க அவர்கள் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker