Latestமலேசியா

மின்னல் எப்.எம்மில் மீண்டும் கலப்படம்; “இசை.MY” என்ற புது பரிணாமத்தில்!

கோலாலம்பூர், ஆகஸ்ட்.21- ஆர்.டி.எம் வானொலியின் தொடக்க காலம் தொட்டே ஒரு நீண்ட பாரம்பரியத்தையும் வரலாற்றையும் உடைய ஒரு நிகழ்ச்சி என்றால் அது கலப்படமாகத்தான் இருக்க முடியும். முன்பு பல நேயர்களின் அபிமான நிகழ்ச்சியாக விளங்கிய கலப்படம் என்ற நிகழ்ச்சியே இப்போது காலத்திற்கேற்ற உருமாற்றம் கண்டு “இசை.MY” நிகழ்ச்சியாக பரிணமித்திருக்கிறது.

பல உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு, பல புதிய கலைஞர்களும் தங்களின் திறமைகளை வெளிபடுத்தும் ஒரு களமாக அமைகிறது இந்நிகழ்ச்சி. முன்பெல்லாம், நம்மூர் கலைஞர்கள், தமிழகத்திலிருந்து வந்த தமிழ்த் திரைப்படப் பாடல்களையே கலப்படம் என்ற நிகழ்ச்சியில் பாடி வந்தனர். ஆனால், இந்த புதிய இசை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க நம்மூரில் உருவான பாடல்களே பாடப்படும் என்பது தனி சிறப்பு.

இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள் யாவரும் நம்மூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்நிகழ்ச்சி 100 விழுக்காடு நம்மூர் கலைஞர்களைப் பெருமைபடுத்தும் நிகழ்ச்சியாக அமையும்.

மூத்தக் கலைஞர்களின் படைப்பையும் மறவாமல், புதிய கலைஞர்களையும் தவறாமல் இழுத்துப் பிடித்திருப்பதால் இந்நிகழ்ச்சி இளையோர் பெரியோர் என அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நிகழ்ச்சி, செப்டம்பர் 2-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11.30 மணிக்கு மின்னல் பண்பலையில் இடம்பெறுவதோடு மட்டுமல்லாமல், மின்னலின் யூடியூப் பக்கத்திலும் பதிவேற்றப்படும்.

முன்னதாக, நேற்று அங்காசாபூரி, பி ரம்பி அரகங்கத்தில் இந்த “இசை.MY” நிகழ்ச்சியின் அறிமுக விழாவை தகவல் தொடர்பு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கோவிந்த் சிங், “நம்மூர் கலைஞர்கள் தங்களின் திறமைகளை அரங்கேற்றுவதற்கு ஒரு சிறந்த களமாக இந்நிகழ்ச்சியில் திகழ்வதால், இது நம் கலைஞர்களுக்கு ஒரு நல்ல தேசிய தினப் பரிசாக அமைகிறது” எனப் புகழ்ந்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆர்டிஎம்மின் துணை இயக்குநர், துவான் ஹஜி அப்துல் மூயிஸ், “மின்னல் பண்பலை இந்நிகழ்ச்சிக்குப் புதுப் பொலிவையும் புத்துயிரையும் கொடுத்திருப்பது, ஆர்டிஎம் எப்போதுமே மக்களின் விருப்பத்திற்கேற்ப நிகழ்ச்சிகளைப் படைக்கத் தவறியதில்லை என்பதையே காட்டுகின்றது” என்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker