Latestமலேசியாவிளையாட்டு

ஸ்குவாஷில் “எப்போதும் சிறந்தவர்” பட்டியலில் நிக்கோலுக்கு முதலிடம்!

கோலாலம்பூர்,செப்.3- ஸ்குவாஷ் விளையாட்டில் நமது நிக்கோல் டேவிட்தான் “எப்போதுமே சிறந்தவர்” என்று உலக முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஸ்குவாஷ் ரசிகர்களும் விளையாட்டாளர்களும் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நற்செய்தியை PSA எனப்படும் ஸ்குவாஷ் அமைப்பு தனது அகப்பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

சிறந்த ஸ்குவாஷ் வீரரையும், வீராங்கணையையும் தேந்தெடுப்பதற்காக கடந்த ஒரு மாத காலமாக அந்த அமைப்பு வாக்களிப்பு ஒன்றை நடத்தியது. அதில், பாக்கிஸ்தானின் ஜஹாங்கீர் கானும், நமது வீராங்கணை நிக்கோல் டேவிட்டும் மக்கள் மனதை வெகுவாகக் கவர்ந்திருப்பது வாக்களிப்பின் முடிவு புலப்படுத்தியுள்ளது.

அதோடு, நிக்கோலின் அசத்தலான சாதனைகள் சிலவற்றை PSA தனது அகப்பக்கத்தில் பட்டியல் இட்டுள்ளது. உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக கடந்த 12 ஆண்டுகளாக அசைக்க முடியாத உயரத்தில் இருந்து வருகிறார் நிக்கோல்.

• 8 உலக சாம்பியம் பட்டங்கள்
• 5 பிரிட்டிஷ் பொது விருது பட்டங்கள்
• 81 PSA பட்டங்கள்
• 102 PSA இறுதியாட்டங்கள்

பினாங்கில் பிறந்த இந்த ஸ்குவாஷ் சூப்பர் ஸ்டார், உலக ஜூனியர் பட்டத்தை இரண்டு முறை வாகை சூடிய முதல் வீராங்கணை ஆவார். எந்த ஆண் விளையாட்டாளரும்கூட இரு முறை அப்பட்டத்தை வென்றதில்லையாம். ஸ்குவாஷ் வரலாற்றில் நீண்ட காலம் அசத்தி வரும் பெருமையும் இவருக்கு உண்டு.

2006-ஆம் ஆண்டில் நிக்கோலின் சாதனை வரலாறு தொடங்கியது. அந்த ஆண்டில்தான் அவர் முதல் முறையாக முதலிடத்திற்கு வந்தார். அன்று முதல் 2015-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 109-வது மாதமாக நிக்கோல் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக இளம் வயதிலேயே ‘டத்தோ’ பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதுவரை 102 PSA இறுதியாட்டங்களில் பங்கேற்ற நிக்கோல் 81 ஆட்டங்களில் வெற்றி அடைந்திருக்கிறார். ஆசிய விளையாட்டில் 5 தங்கப்பதக்கங்களையும், காமன்வெல்த்தில் இரு தங்கப்பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

இதனிடையே, எப்போதும் சிறந்தவர் என தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரத்தை நினைத்து தான் மனம் நெகிழ்ந்து போவதாக நிக்கோல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனக்கு வாக்களித்த ரசிகர்கள் அனைவருக்கும் அவர் நன்றித் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker