Latestமலேசியா

வெளியேறுமாறு ‘டத்தோ’ மிரட்டல்; பிரதமருக்கு கம்போங் புக்கிட் கூடா மக்கள் மகஜர்

புத்ராஜெயா,செப்.5- கிள்ளான்,கம்போங் புக்கிட் கூடா மக்களை அங்கிருந்து 12 நாட்களுக்குள் வெளியேறுமாறும், இல்லாவிடில் வீடுகளை எரிக்கப் போவதாகவும் பிரதமர் உத்தரவிட்டார் என தங்களை மிரட்டிய டத்தோ பட்டம் கொண்ட ஆடவருக்கு எதிராக அப்பகுதி மக்கள் 20 பேர் சேர்ந்து இன்று பிரதமர் துன் மகாதீரிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

ஆகஸ்ட் 21-ஆம் தேதி காலை 7.15 மணி அளவில் தன்னை டத்தோ என்று மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் தங்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டியது மட்டும் இல்லாமல் உடன் நான்கு போலீஸ் அதிகாரிகளையும் அழைத்து வைந்திருக்கிறார்.

“எங்களை வெளியேறு சொல்வதற்கான உத்தரவு நோட்டிஸ் இருக்கிறதா?” என கம்போங் புக்கிட் கூடா மக்கள் கேட்டபோது,
போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் துப்பாக்கியைக் காண்பித்து பயமுறுத்தியதாக கம்போங் புக்கிட் கூடா செயற்குழுப் பிரதிநிதி மானிஸ் பிந்தி பாபா என்பவர் தெரிவித்தார்.

2015-ஆம் ஆண்டில், பாய்சால் என்ற நபர் இது தன்னுடைய நிலம் என்று உரிமைக் கோரி தங்களை அங்கிருந்து வெளியேறுமாறு பல வகையில் தொந்தரவு கொடுத்து வந்தார். எனினும், அந்த வழக்கில் ஈராண்டுகளுக்கு முன் தாங்கள் வெற்றிப் பெற்றதாக மானிஸ் பாபா கூறினார். அதற்குள் இன்னொரு பிரச்சனை தாங்கள் எதிர்நோக்கியுள்ளதாக அவர் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

50 ஆண்டுகளுக்கும் மேல் அவர்கள் கம்போங் புக்கிட் கூடாவில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக நடந்துள்ள இவ்விவகாரம் மலேசிய சோசியலிஸ்ட் கட்சி (PSM)-இன் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து, இன்று, கம்போங் புக்கிட் கூடா மக்களுடன் பிஎஸ்எம் பிரதிநிதிகளும் பிரதமர் அலுவலகத்திற்கு மகஜரைச் சமர்ப்பிக்கச் சென்றிருந்தனர்.

துன் மகாதீரின் அரசியல் செயலாளர் அபு பாக்கார் யாஹ்யா என்பவர் அவர்களிடமிருந்து மகஜரைப் பெற்றுக் கொண்டார். இது குறித்து விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் நம்பிக்கை அளித்ததாக பிஎஸ்எம் பிரதிநிதி அருட்செல்வம் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker