
கோலாலம்பூர்,செப்.11- நம்மவர்கள் பாகுபலியை அறிந்து வைத்திருக்கும் அளவிற்கு 100 பாகுபலிகளுக்கு இணையாக திகழ்ந்த அரசன், எதிரிகளை தொம்சம் செய்த மாவீரன் இராஜேந்திர சோழனை அறிந்து வைத்திருக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நாட்டில் இருட்டடிக்கப்பட்ட தமிழர் வரலாறே இதற்கு காரணமாகும்.
பாரத நாட்டிலிருந்து இம்மலை நாட்டுக்கு முதன் முதலாக சஞ்சிக் கூலிகளாக வந்தோம் என்று நம்மையே சொல்ல வைத்த பெருமை இந்நாட்டு வரலாற்று நூல்களுக்கு உண்டு. ஏட்டில் மட்டுமே இவர்களால் தமிழர் வரலாற்றை மாற்றி எழுத முடியும். தமிழர்கள் உலகம் முழுவதும் விட்டுச் சென்ற சுவடுகளை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
இம்மலையூருக்கு நாம் சஞ்சிக்கூலிகளாகத்தான் முதன் முதலில் வந்தோம் என்று சொல்வதை முதலில் நிறுத்துங்கள். கப்பலோட்டியத் தமிழன் எங்கள் அரசன் இராஜேந்திர சோழன் இந்த சுவர்ண பூமியில் கடாரம் கண்ட கதை சொல்கிறேன் கேள் என மார்த்தட்டிச் சொல்லுங்கள். இதனை நம் தமிழருக்கு குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துச் சொல்வதற்காகவே நடத்தப்பட்டதுதான் “தெற்காசியாவில் இராஜேந்திர சோழனின் அடிச்சுவடுகள்” என்ற நிகழ்ச்சி.
மலேசிய இந்துதர்ம மாமன்றம், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்துடன் இணைந்து மைநாடி அறவாரியத்தின் ஆதரவில் இந்நிகழ்ச்சி செப்டம்பர் 8-ஆம் தேதி தலைநகர் கலா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அமர்வதற்கு நாற்காலிகள் இல்லாத அளவிற்கு இராஜேந்திரன் சோழனுக்கும் நமக்குமான உறவை தெரிந்து கொள்ள ஏராளமானோர் அரங்கில் குழுமியிருந்தனர்.
“சோழர் வளர்த்த கலை” என்ற தலைப்பில் தமிழக அகழ்வாராய்ச்சித் துறையைச் சேர்ந்த முனைவர் சொ.சாந்தலிங்கம், “கடாரம் கொண்ட சோழன்” என்ற தலைப்பில் பூஜாங் பள்ளத்தாக்கு நூலாசிரியரும் சமூக ஆர்வலருமான டத்தோ வி.நடராஜன், “சோழ வணிகம்” என்ற தலைப்பில் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் ஆர்.கோமகன் ஆகியோர் சான்றுகளுடன் எடுத்துரைத்த தகவல்கள் தமிழ்ப் பேரரசன் இராஜேந்திர சோழனை தினம் ஒரு முறையாவது கற்பனை செய்து பார்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, “சோழரின் அடிச்சுவடுகள்” என்ற தலைப்பில் பேசிய இளைஞர் ஜே.கே விக்னேஸ்வரன், சோழ வேங்கையன் இராஜேந்திரன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கே தனது சோழ சாம்ராஜ்ஜியத்தை அமைத்தவன் என்பதற்காக ஒரு முக்கியச் சான்றை மிகவும் சாதாரணமாகச் சொல்லிச் சென்றுவிட்டார். அதைக் கேட்டவர்கள்தான் இன்னும் அந்த வியப்பிலிருந்து மீளாமல் இருப்பார்கள் என்று சொல்ல வேண்டும். சோழ சாம்ராஜ்ஜிய சின்னத்தில் என்னவிருக்கும்? வேங்கை இருக்கும். அதே வேங்கை கடல் தாண்டி இராஜேந்திர சோழன் வெற்றிக் கொண்ட தேசங்களின் அரச சின்னங்களில் இன்னும் இருக்கின்றது. அது, மலேசியாவின் தேசிய சின்னத்திலும் உள்ளது. ஆச்சரியம். ஆனால், உண்மை! இனி நமது தேசிய சின்னத்தை பார்க்கும் போதெல்லாம் இராஜேந்திரன் சோழன் கண் முன்னே வந்து போவான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!