Latestமலேசியா

‘பாவ்’ கடையில் என்னிடம் எஸ்.எஸ்.டி வசூலிக்கப்பட்டது!– நஜிப்

கோலாலம்பூர், செப்.11- ‘பாவ்’ எனப்படும் உணவு பண்டத்தை விற்பனை செய்யும் கடையில் எஸ்.எஸ்.டி வசூலிக்கப் பட்டது தொடர்பில், மக்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளதை, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் சாடியுள்ளார்.

அந்த ‘பாவ்’ கடையில் தம்மிடம் எஸ்.எஸ்.டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி வசூலிக்கப் பட்டதை நிரூபிக்கும் ரசீதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த நஜிப், வாடிக்கையாளரான தம்மிடம் ஏன் எஸ்.எஸ்.டி வசூலிக்கப் பட்டது என்று லிம் குவான் எங்கிடம் கேள்வி எழுப்பினார்.

“உற்பத்தியாளர்களிடம் தான் எஸ்.எஸ்.டி வசூலிக்கப் படும். வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப் படாது என்று தானே லிம் குவான் எங் கூறினார்? நான் உற்பத்தியாளர் அல்ல. பின்னர், எதற்காக என்னிடம் 6 விழுக்காடு எஸ்.எஸ்.டி வசூலிக்கப் பட்டது?” என்று நஜிப் வினவினார்.

“முன்பு ‘பாவ்’ கடையில் ஜி.எஸ்.டி வசூலிக்கப் பட்டது. ஜி.எஸ்.டி அகற்றப் பட்டுள்ள வேளையில், அதே 6 விழுக்காடு வரி எஸ்.எஸ்.டியாக வசூலிக்கப் படுகிறது. அப்படியென்றால், ஜி.எஸ்.டி வெறும் பெயர் மாற்றம் தான் கண்டுள்ளதா? அதற்கான அவசியம் என்ன?
“ஜி.எஸ்.டி அகற்றப் பட்ட போதிலும், பொருட்களின் விலைகள் குறையவில்லை. பின்னர் எதற்காக வரி முறையை புதிய அரசாங்கம் மாற்றியது?” என்று நஜிப் கேள்வி எழுப்பினார்.
‘பாவ்’ பண்டத்திற்கு மட்டுமல்லாமல், அந்தக் கடையில் குளிர் பானம் அருந்தியதற்காகவும், தம்மிடம் எஸ்.எஸ்.டி வசூலிக்கப் பட்டதாக அவர் தெரிவித்தார்.

“நான் அக்கடையில் குளிர்ந்த எலுமிச்சை தேநீரை அருந்தினேன். எலுமிச்சை மற்றும் தேயிலையை உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குவதால், அதற்கு 10% எஸ்.எஸ்.டி வரி வசூலிக்கப்படும். அதனை கருத்தில் கொண்டால், நான் மொத்தம் 16% எஸ்.எஸ்.டியை செலுத்தி உள்ளேன். அது 6% ஜி.எஸ்.டி வரியை விட கூடுதலாக உள்ளது” என்று நஜிப் சுட்டிக் காட்டினார்.

நஜிப் பகிர்ந்துள்ள ரசீதில், அவரிடமிருந்து ரிம.3.80 எஸ்.எஸ்.டியாக வசூலிக்கப் பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

தேசிய முன்னணி கட்சி ஜி.எஸ்.டியை அமல்படுத்திய போது, நஜிப் இவ்வாறு எவ்வித ரசீதுகளையும் பகிர்ந்து குறைப்பட்டுக் கொள்ளவில்லை என்று லிம் குவான் எங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker