Latestமலேசியா

இரு குண்டர் கும்பல் நபர்கள், போலீஸ் அதிரடிக்கு பலி!

காஜாங், செப்.12- இன்று அதிகாலையில், இங்குள்ள ஜாலான் நஸ்பாண்டியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ‘தேவன் 360’ மற்றும் ‘ஸ்பைடர் 08’ ஆகிய குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சிலாங்கூர் கடும் குற்றப் பிரிவான டி-4 பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர், ஜாலான் செமிஞ்சேயில் தம்முடைய வழக்கமான கண்காணிப்பு ரோந்துப் பணியின் போது ‘போர்சே’ காரில் இரண்டு நபர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததைக் கண்டார் என்று சிலாங்கூர் குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவரான பட்ஜில் அமாட் தெரிவித்தார்.

அந்தக் காரின் பதிவு எண்களைச் சோதித்த அந்தப் போலீஸ் அதிகாரி, அந்தக் காரின் நிறம் மாறியிருப்பதைக் கண்டார். அந்தக் காரின் நிறம் வெள்ளை எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அது அங்கு கறுப்பு நிறத்தில் இருந்தது கண்டு சந்தேகமடைந்த போலீஸ் அதிகாரி, அது குறித்து விசாரிக்கக் காரை நெருங்கிய போது அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அவர்களைக் கிட்டத்தட்ட நான்கரை கிலோமீட்டர் தூரம் வரை பின்தொடர்ந்தார் அந்த போலீஸ் அதிகாரி.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் அந்தக் கார் மடக்கப்பட்ட போது அதிலிருந்து இறங்கிய அவர்கள் பலமுறை போலீஸ் அதிகாரியை நோக்கி சில முறை சுட்டனர். இந்நிலையில் தற்காப்பு நடவடிக்கையில் இறங்கிய போலீஸ் அதிகாரி, அந்தத் துப்பாக்கி ஆசாமிகளை நோக்கி பதிலுக்குச் சுட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் பலியாயினர். பின்னர் அந்தக் காரினுள் அவர் சோதனை செய்து பார்த்த போது அதனுள் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் பாராங் கத்திகள் உள்பட சில ஆயுதங்களும் இருந்ததை கண்டுபிடித்தார்.

இவர்கள் இருவரும் 43 வயது மற்றும் 36 வயதுடைய உள்நாட்டுக்காரர்கள். ஒருவர் பண்டமாரான் கிள்ளானையும் மற்றொருவர் தெலுக் பங்கலிமா காராங்கையும் சேர்ந்தவர் எனத்தெரிய வந்தது. போதைப்பொருள் மற்றும் வீடு புகுந்து திருடும் குற்றங்கள் ஆகியவற்றில் இவர்கள் சம்பந்தப் பட்டிருப்பதாக அவர்களுடைய முந்தைய குற்றப்பதிவுகள் காட்டுகின்றன.

இந்த இரு சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர். ‘தேவன் 360’ குண்டர் கும்பலையும் மற்றொருவர் ‘ஸ்பைடர் 08 கேங்’கையும் சேர்ந்தவர் எனக் கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வந்தனர் என்பதோடு 6 கொள்ளைச் சம்பவங்களிலும் கார் கடத்தல் சம்பவங்களிலும் சம்பந்தப் பட்டுள்ளனர் எனக் தெரிய வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker