Latestமலேசியா

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரிம.1.50 காசா? அதெல்லாம் முடியாது! – நிதியமைச்சு

கோலாலம்பூர், செப்.12- பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரிம.1.50-ஆக குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று நிதியமைச்சின் துணை அமைச்சர் டத்தோ அமிருடின் ஹம்ஸா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

உலகளாவிய நிலையில், பெட்ரோல் விலை அதிகளவில் சரிந்தால் மட்டுமே, நாட்டின் பெட்ரோல் விலை ரிம.1.50-ஆக குறைக்கப் படும் என்று அவர் கூறினார்.

கடந்த 14-ஆவது பொதுத் தேர்தலின் போது, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கையில், பெட்ரோல் விலையை ரிம.1.50-ஆக குறைப்போம் என்று பக்காத்தான் ஹராப்பான் எவ்வித வாக்குறுதியையும் வழங்கவில்லை என்பதையும் அமிருடின் சுட்டிக் காட்டினார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தேர்தல் கொள்கை அறிக்கையில் நாட்டின் பெட்ரோல் விலையை ரிம.1.50-ஆக குறைப்போம் என்று கூறியதாகவும், அதனை செயல்படுத்த அரசாங்கம் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் செனட்டர் டத்தோ இங் சியாங் சின் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அமிருடின் அவ்வாறு பதிலளித்தார்.

கடந்த மே மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை, ரோன் 95 வகை பெட்ரோலுக்கு அரசாங்கம் ரிம.1.667 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக அமிருடின் கூறினார்.

ரோன் 95 ரகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை லிட்டர் ஒன்றுக்கு முறையே ரிம.2.20 மற்றும் ரிம.2.18-ஆக அரசாங்கம் நிலைப்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார். குறிப்பிடப் பட்ட விலையை விட, உலகளாவிய பெட்ரோல் சந்தையில் அந்த பெட்ரோலின் விலை அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெட்ரோலுக்குத் தேவையான மானிய ஒதுக்கீடு குறித்த விரிவான வழிமுறையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும், அது தொடர்பிலான இறுதி முடிவுகள் எடுக்கப் பட்ட பின்னர், அது அனைவருக்கும் அறிவிக்கப் படும் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

125 -சிசிக்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1300 சிசிக்கு குறைவான கார்களுக்கு அந்த பெட்ரோல் மானியம் ஒதுக்கிடப் படும் என்று அமிருடின் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker