Latestமலேசியா

2018- இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழா: ஜொகூர் துன் அமீனா பள்ளி வென்றது!

கோலாலம்பூர், செப்.12- அறிவியல் பாடத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், 21ஆம் நூற்றாண்டு கற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடனும் 2018-ஆம் ஆண்டு இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா பல தடங்கலுக்குப் பின் தலைநகர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் சிறப்பாக நடந்து முடிந்தது.

இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2007ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, இன்று அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கத்தால் (ASTI) தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என மிகச் சிறப்பாக கடந்த 11 ஆண்டுகளாக நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது.

இந்த மாபெரும் விழாவில் ஒவ்வோர் ஆண்டும் 60 ஆயிரம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயனடைகிறார்கள். அறிவியல் விழா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை பயிற்றுவித்து, அவர்களின் வழி மாணவர்களுக்கு சரியான பரிசோதனை முறைகளை கற்பித்து, ஆக்கச் சிந்தனைகளை விதைத்து, கண்டுபிடிப்பு, புத்தாக்கம் போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடச் செய்கிறது.

அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கத்தின் வழி, நாட்டிற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்திருக்கும் வகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நிறைய சாதனைகளை செய்து வருகின்றனர்.

மேலும் இவர்களுடைய சாதனை, நமது நாட்டோடு நின்றுவிடாமல், தொடர்ந்து இங்கிலாந்து, தைவான், சீனா, கொரியா, ஹாங்காங், இந்தோனேசியா, தாய்லாந்து, கனடா, ரஷ்யா, போன்ற நாடுகளில் நடைபெறும் அனைத்துலக போட்டிகளிலும் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்ப்பள்ளிகளுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதை அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

தமிழ்ப்பள்ளிகளுக்கிடையே மிக பெரிய அளவில் நடைபெறும் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா இவ்வாண்டு போதுமான நிதியின்மையால் மாநில அளவிலான அறிவியல் விழாவை நடத்தாமல், தேசிய அளவிலான அறிவியல் விழாவை பல மாற்றங்களுடன் மிக எளிமையான முறையில் செய்து முடித்ததாக அஸ்தி இயக்கத்தின் தல்லவர் முனைவர் யூனுஸ் யாசின் கூறினார்.

இம்முறை இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவிற்கான பயிற்சிகளில் மொத்தம் 327 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 154 பள்ளிகள் தேசிய அளவிற்கான அறிவியல் விழாவில் கலந்துகொள்ள தங்களின் அறிவியல் பரிந்துரையை சமர்ப்பித்தனர்.

அவற்றில் 111 பள்ளிகள் தங்களின் பரிந்துரைக்கு ஏற்ப முழுமையான அறிவியல் பரிசோதனைகளையும் காணொளியையும் அனுப்பி வைத்தனர். இறுதியில் நடுவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆய்வுகளையும் படைப்புகளையும் கொண்ட 10 பள்ளி மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் நற்சன்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

முதல் நிலையில் வெண்தங்கத்தை (பிளாட்டினம்) ஜொகூர் துன் அமினா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தட்டிச் சென்றனர். இரண்டாம் நிலையில் பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளியும் லாடாங் லன்சாங் தமிழ்ப்பள்ளியும் தங்கம் வென்றன.

மூன்றாம் நிலையில் ஜொகூரைச் சேர்ந்த யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி, பினாங்கைச் சேர்ந்த லாடாங் சங்காட் தமிழ்ப்பள்ளி மற்றும் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த லோபாக் தமிழ்ப்பள்ளியும் வெள்ளிப் பதக்கத்தை வென்றன.

பகாங்கைச் சேர்ந்த மெந்தகாப் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூரைச் சேர்ந்த தாமான் பெர்த்தாமா தமிழ்ப்பள்ளி, ஜொகூரைச் சேர்ந்த பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி மற்றும் சிலாங்கூரைச் சேர்ந்த பூச்சோங் தமிழ்ப்பள்ளி ஆகிய நான்கு தமிழ்ப்பள்ளிகளும் வெண்கலப் பதக்கத்தை வெற்றிக் கொண்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker