Latestமலேசியா

சலவைக் கடையில் பெண்ணிடம் கொள்ளை; தாயாரே கொள்ளையனை போலீசிடம் பிடித்துக் கொடுத்தார்

கெடா,செப்.13- நேற்று முன்தினம் சுங்கை பட்டாணியில் உள்ள தானியங்கி சலவை கடை ஒன்றில் பெண் ஒருவரிடம் இரு ஆடவர்கள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் கொள்ளையர்களில் ஒருவனை போலீசார் இன்று கைது செய்தனர். அவனுக்கு 21 வயது என தெரிவிக்கப்பட்டது.

நேற்று வெளியான சிசிடிவி காமிராவில் இரு கொள்ளையர்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தனர். ஆனால், அவர்களுக்கு உடந்தையாக கைதானவனின் 30 வயதுக்குட்பட்ட மனைவியும் இருந்திருக்கிறாள். இரு கொள்ளையர்களும் கொள்ளையடித்து வரும் வரை அவள் காரில் தயாராக காத்திருந்திருக்கிறாள். அவளையும் போலீசார் கைது செய்ததாக மாநில குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் மியோர் பாரிட் அல் அத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அந்தக் கொள்ளையனின் தாயாரே அவனையும் மருமகளையும் போலீசுடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இருவருமே ஷாபு வகை போதைப்பொருள் உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றோரு கொள்ளையன் தேடப்பட்டு வருகிறான் என மியோர் கூறினார்.

தானியங்கி சலவைக் கடை ஒன்றில் துணி துவைக்கச் சென்ற பெண் ஒருவரிடம் பாராங் கத்தி ஏந்திய இரு ஆடவர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பிலான காணொளி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.அச்சம்பசம் சுங்கை பட்டாணி, பண்டார் புத்ரி ஜெயாவில் நிகழ்ந்தது.

அந்த சலவைக் கடையில் ஒரு மலாய்க்காரப் பெண் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த இரு ஆடவர்கள் முதலில் அப்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த பாராங் கத்தியை எடுத்து அந்தப் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து கைப்பேசி, பணப் பை, கைச் சங்கிலியைப் பறித்துள்ளனர்.

அச்சமயத்தில் மற்றோர் ஆடவன் பெண்ணின் தலைத் துணியை விலக்கி கழுத்துச் சங்கிலியையும் அபகரித்துள்ளான். பிறகு, அவ்விரு ஆடவர்களும் அங்கிருந்து தப்பித்தோடி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker