Latestமலேசியா

14,000 வாகன லைசன்சுகள் காசுக்கு விற்பனை: 12 ஜேபிஜே அதிகாரிகள் கைது!

புத்ராஜெயா, செப்.13- 14,000 வாகன லைசன்ஸ்களை வெளியிடுவதில் ஊழல் புரிந்த, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்த 12 சாலை போக்குவரத்து இலாகா அதிகாரிகளை ஊழல் எதிர்ப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பெர்லீஸ், பேரா, நெகிரி செம்பிலான், சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த சாலை போக்குவரத்து இலாகாவின் துணை அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதாகியவர்களில் ஒருவர் துணை இயக்குநர் பதவியை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4-ஆம் தேதியிலிருந்து இன்று வரை நடத்தப்பட்ட சோதனை வாயிலாக அந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

அமைச்சக அதிகாரிகள் மத்தியில் நிலவும் அதிகாரத் துஷ்பிரயோகத்தை தாம் கடுமையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
“போக்குவரத்து அமைச்சு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல், தங்களின் இஷ்டத்திற்கு அதிகாரத் துஷ்பிரயோகத்தை அந்த அதிகாரிகள் புரிந்துள்ளனர்.

“இவ்வேளையில், அவர்களின் குற்றங்களை கண்டறிந்து அவர்களை கைது செய்துள்ள மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தை நான் பாராட்டுகிறேன். தவறு புரிந்தவர்கள் மீது எவ்வாறான நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்பது குறித்து எம்.ஏ.சி.சியே முடிவெடுக்கும்” என்று அந்தோணி லோக் சொன்னார்.

மலேசியா மற்றும் சீனாவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு லைசன்ஸ் வழங்குவதற்கு, அந்த துணை அமலாக்க அதிகாரிகள் ரிம.2,000-யிலிருந்து ரிம.3,500 வரை கட்டணமாக வசூலித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பணத்திற்காக விற்கப்பட்ட லைசென்சுகளை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் எச்சரித்தார். தற்காக ஒருமாத காலம் அவகாசம் வழங்கப்படும்.

இன்று தொடங்கி ஒருமாதம் கால அவகாசம் தரப்படுகிறது அதற்குள் அத்தகைய வழிகளில் விலைக்கு வாங்கிய லைசென்சுகளை சாலை போக்குவரத்துத் துறையிடம் அவர்கள் தாங்களாகவே ஒப்படைத்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்கள் மீது விசாரணைகள் பாயாது. இல்லையேல், அவர்களைக் கண்டுபிடிக்கும் பணித் தொடங்கப்பட்டு அவர்கள் தண்டனைக்கு உள்ளாக நேரலாம் என அமைச்சர் எச்சரித்தார்.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker