Latestமலேசியா

பாஸ்சுடன் கூட்டணியா? அம்னோவுக்கு மசீச எச்சரிக்கை

கோலாலம்பூர், செப்.14- பாஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் எண்ணத்தை அம்னோ கொண்டிருந்தால், மலாய்க்காரர்கள் அல்லாத மக்களைக் கொண்டிருக்கும் தொகுதிகளில், வாக்காளர்களின் ஆதரவை தேசிய முன்னணி அறவே பெற முடியாது என்று மசீச கட்சியின் துணைத் தலைவரான டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் எச்சரித்தார்.

பாஸ் கட்சியுடன் அம்னோ இணைய வேண்டும். அவ்வாறு செய்வதன் வாயிலாக, தேசிய முன்னணி மீண்டும் துளிர்த்தெளும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக  அம்னோ உச்சமன்ற உறுப்பினரான டத்தோ லோக்மான் நோர் அடாம் பரிந்துரைத்துள்ளார்.

“மற்ற கட்சிகளின் சார்பில் முடிவெடுக்கும் உரிமை லோக்மானுக்கு இல்லை. மலேசியா பல்லின மக்களை கொண்டிருக்கும் நாடாகும். அதன் அடிப்படையில், நாம் அனைவரும் பன்முகத் தன்மையை கொண்டிருக்க வேண்டும்” என்று வீ கா சியோங் அறிவுறுத்தினார்.

பாஸ் கட்சியுடன் இணைந்து செயல்படும் எண்ணத்தை அம்னோ கொண்டிருந்தால், பிற்காலத்தில், மலாய்க்காரர்கள் இல்லாத தொகுதிகளை, தேசிய முன்னணி அரசாங்கம் கைப்பற்ற முடியாது என்பதை அவர் நினைவுறுத்தினார்.

“நாட்டில் 222 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள. அத்தொகுதிகளில் 85 தொகுதிகளில், 35 விழுக்காடு சீனர்களும் இந்தியர்களும் உள்ளனர். 69 தொகுதிகளில், 40 விழுக்காடு சீன மற்றும் இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

“அம்னோ பாஸ் கட்சியுடன் இணைந்தால், இத்தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பிற்கு தே.மு ‘டா டா’ சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். அதேப் போன்று சரவாக்கின் 31 தொகுதிகள் மற்றும் சபாவின் 25 தொகுதிகளையும் முழுமையாக இழக்கும் அவலம் ஏற்படும்” என்று வீ கா சியோங் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி கூட்டணியில், அம்னோ இனவாத மற்றும் சர்வாதிகாரம் கொண்ட கட்சியாக திகழ்ந்ததால், தேசிய முன்னணிக்கு மலேசிய சீனர்கள் மற்றும் இந்தியர்கள் வாக்களிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இனவாத அரசியலை விட்டு விட்டு, மக்களின் சமூக மேம்பாட்டிற்கு உழைக்கும் கட்சியான அம்னோ திகழ வேண்டும் என்று ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைய்ரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டதை, அம்னோ காதில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் வீ கா சியோங் அறிவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker