Latestமலேசியா

பேங்க் நெகாரா கைவசமுள்ள பெஸ்தீனோ முதலீட்டாளர்களின் ரிம24 மில்லியன் பணத்தை மீட்க ஏஜிக்கு மகஜர்!

செப்டம்பர் 16-இல் முதலீட்டாளர்களிடம் கையொப்பம் சேகரிப்பு

ஈப்போ,செப்.14- பெஸ்தீனோ தங்க முதலீட்டாளர்களின் மேல்முறையீட்டு வழக்கு இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேளையில், பேங்க் நெகாரா முடக்கம் செய்து அதன் கைவசமுள்ள 24 மில்லியன் பணத்தை மீட்கும் கோரிக்கையை முன்வைத்து அட்டர்னி ஜெனரல் டோம்மி தோமசிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது.

அந்த மகஜரில் பெஸ்தீனோ முதலீட்டாளர்களின் கையொப்பத்தை பெறுவதற்கான கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது செப்டம்பர் 16-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஈப்போ, அருள்ஒளி மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக பெஸ்தீனோ முதலீட்டாளர் நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஜய் வேலாயுதம் தெரிவித்தார்.

அதனால், பெஸ்தீனோ முதலீட்டாளர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு நினைவுறுத்தப்படுகிறது. தங்க முதலீட்டுத் திட்டத்தில் பறிபோன 6,764 பேரின் 411 மில்லியன் ரிங்கிட் பணம் திரும்ப கிடைக்காமல் பல ஆண்டுகளாக கேள்விக் குறியாகவே இருக்கிறது. புதிய அரசாங்கமாவது இதற்கு தீர்வு சொல்லும் என்ற எதிர்பார்ப்புடன் தங்களின் மகஜரை அவர்கள் டோம்மி தோமசிடம் வழங்கவுள்ளனர்.

மேல் விவரங்களுக்கு, 0125226321 என்ற எண்ணில் விஜய் வேலாயுதத்தையும் அல்லது 0125123665 என்ற எண்ணில் கண்ணையாவையும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பெஸ்தீனோ முதலீட்டாளர்களின் பணத்தை மீட்கும் போராட்டம் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லும் முன்னர், முந்தைய நிதி அமைச்சருக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் பல மகஜர்கள் வழங்கப்பட்டிருந்தும் பலனில்லாமல் போனது. அதன் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

2013-ஆம் ஆண்டில் ஒருமுறை அன்றைய நிதி அமைச்சரிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுவதற்கு முன் பேங்க் நெகாரா முடக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்பதற்கான வழிவகைகள் குறித்து பெஸ்தீனோ முதலீட்டாளர் நடவடிக்கைக் குழுவுக்கு ஆலோசனைகளை வழங்க அப்போது வழக்கறிஞராக இருந்த டோம்மி தோமஸ் தாமாகவே தன்னார்வ அடிப்படையில் முன் வந்தார். அதை அடுத்து, பேங்க் நெகாரா, அட்டர்னி ஜெனரல், நிதி அமைச்ச்ய் அதிகாரிகள் ஆகிய முத்தரப்புகளுடன் மூன்று முறை நடத்தப்பட்ட சந்திப்பின்போது பெஸ்தினோ முதலீட்டாளர் நடவடிக்கைக் குழுவுடன் டோம்மி தோமசும் கலந்து கொண்டார்.

அந்த சந்த்திப்பில், பேங்க் நெகாரா முடக்கி வைத்துள்ள 2.4 மில்லியன் பணத்தை முதலீட்டாளர்களிடம் ஓப்படைக்க தடை ஏதும் இல்லை எனும் தமது கருத்தையும் டோம்மி முன்வைத்தார். அதுமட்டுமின்றி, பேங்க் நெகாரா சார்பாக தாம் அதற்கான நீதிமன்ற விண்ணப்பத்தைச் செய்வதாக கூறிய டோம்மி அதன்படி விண்ணப்பத்தை தயார் செய்தும் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு தரப்புக்கள் அக்கறைக் காட்டாததாலும் ,காலம் தாழ்த்தப்பட்டதாலும் டோம்மி அதிருப்தி அடைந்தது மட்டுமின்றி இவ்விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்தியும் கொண்டார் என விஜய் வேலாயுதம் தமது பத்திரிக்கைச் செய்தியில் குறிப்பிட்டார்.

எனவே, தற்போது அட்டர்னி ஜெனரலாக தோம்மி தோமஸ் பதவி ஏற்றிருக்கும் வேளையில், இந்த விவகாரத்தை நன்கு அறிந்து வைத்திருக்கும் அவரிடம் பெஸ்தினோ முதலீட்டாளர்கள் அனைவரும் சேர்ந்து மகஜரை கூடிய விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker