Latestமலேசியா

மலாக்காவில் ஒத்திகை: பினாங்கில் தாக்குதல்! ‘அர் ராயா’ கும்பலின் திட்டம் அம்பலம்!

கோலாலம்பூர், செப்.16- போலீசாரால் முறியடிக்கப்பட்ட ‘அர் ரயா’ என்ற தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள், மலாக்காவில் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி ஓர் ஒத்திகை நடத்தி பார்த்த பின்னர், பினாங்கில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது.

கடந்த மாதம் மலாக்காவிலுள்ள கேளிக்கை மையம் ஒன்றில் தங்களது ஒத்திகைத் தாக்குதலை இக்கும்பல் நடத்தத் திட்டமிட்டது. அந்த ஒத்திகைக்குப் பின்னர் ஆகஸ்டு 31ஆம் தேதி, பினாங்கு மாநிலத்தில் மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலை தொடுக்க தயாராகி வந்தனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்கள் வெறும் புகைக் குண்டுகளைப் யன்படுத்தத் திட்டமிட்டு இருந்தாலும், பயங்கரவாத மிரட்டல் மிக உண்மையானது. இத்தகைய புகைக் குண்டுகளால் பதட்டமடைந்த மக்கள் கூட்டம் அமளியிலும் அச்சத்திலும் சிதறி ஓடும் போது ஏராளமானோர் படுகாயம் அடையவும் உயிரிழக்கவும் நேரும் என்று இந்தக் கும்பல் கருதியது.

இணையத் தளத்தில் தேடி, தகவல்களைப் பெற்று, புகைக் குண்டுகளைத் தயாரிக்க இந்த பயங்கரவாதக் கும்பல் கற்றறிந்ததாக தெரிகிறது. இந்தத் திட்டம் வெற்றி அடைந்திருந்தால், அடுத்தடுத்து இன்னும் அபாயகரமான தாக்குதல்களை இந்தக் கும்பல் நடத்தக்கூடிய சாத்தியங்கள் இருந்ததாக போலீசார் கருதுகின்றனர்.

அர் ராயா தீவிரவாத கும்பலைச் சேர்ந்த ஐவரை போலீசார் கடந்த வெள்ளியன்று கைது செய்திருப்பதை போலீஸ் படைத்தலைவர் டான்ஶ்ரீ முகம்மட் ஃபுஷி ஹருண் உறுதிப்படுத்தினார்.

இவர்கள் எந்தெந்த வகைகளில் மலேசியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்பதைக் கண்டறிய போலீசார் இவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker