Latestமலேசியா

பிகேஆர் தேர்தலில் லஞ்சம்: இருவர் கைது! அவர்களை நீக்குவேன்! -அன்வார்

கோலாலம்பூர், செப்.17- பிகேஆர் கட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பிய வேட்பாளர் ஒருவரிடமிருந்து 20ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற முயன்ற கெடாவைச் சேர்ந்த கட்சி அதிகாரிகள் இருவர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால், அவர்கள் விஷயத்தில் தாம் இரக்கம் காட்டப் போவதில்லை என்று டத்தோஶ்ரீ அன்வார் அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் டிவிசன் தேர்தலில் போட்டியிட விரும்பிய வேட்பாளரின் பெயர், கணினி பதிவில் இடம்பெற வேண்டுமானால் 20 ஆயிரம் ரிங்கிட் பணம் தரவேண்டும் கோரியதாக கட்சியின் முக்கிய அதிகாரிகள் இருவரை எம்ஏசிசி எனப்படும் லஞ்சத் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் கட்சியின் தேர்தல் குழுவில் இடம்பெற்றிருந்தனர் என்று கூறப்படுகிறது.

“இந்த இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டு நிருபனமானால், அவர்களிடம் நான் இரக்கம் காட்ட மாட்டேன். அவர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை நானே முன்வைப்பேன்” என்றார் அன்வார்.

இவர்கள் இருவரும் இரு வேறு இடங்களில் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவரிடமிருந்து 10 ஆயிரம் ரிங்கிட் பணம் மீட்கப்பட்டது. இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை எம்ஏசிசியின் கெடா மாநில இயக்குனர் டத்தோ முகம்மட் ஃபவ்ஸி உறுதிப்படுத்தினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker