Latestமலேசியா

நச்சு மதுபானம்; மரண எண்ணிக்கை 19-ஆக உயர்வு!

கோலாலம்பூர்,செப்.19- சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் வாங்கப்பட்ட 3 வகையான மதுபானங்களை அருந்தியதை அடுத்து நச்சுத்தன்மை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 14 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம், ‘மாண்டாலே விஸ்கி, கிங் பிஷர் பீர், கிரேண்ட் ரோயல் விஸ்கி ஆகிய மூன்று வகையான மது பானங்களை அருந்திய மொத்தம் 51 ஆடவர்கள்  இந்த நச்சுத்தன்மை பாதிப்புக்கு இலக்காகி உள்ளனர்.

அவர்கள் அருந்திய மது பானங்களின் மாதிரிகள் சுங்கை பூலோ தேசிய சுகாதார ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுவிட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். அதே சமயம், பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீர், இரத்த மாதிரிகள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றாரவர்.

தொடக்கக் கட்டத்தில், சிலாங்கூரில் மட்டுமே இந்த மதுபான நச்சுத்தன்மை சம்பவங்கள் பதிவாகியதாக கூறப்பட்டது. மாறாக, நேற்று மாலை 5 மணிக்கு மேல், சிலாங்கூரில் 45 சம்பவங்களும், கோலாலம்பூரில் 6 சம்பவங்களும் பதிவாகின.

பாதிக்கப்பட்டவர்களில், 48 பேர் வங்காளதேசம், நேப்பாள, இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். எஞ்சிய மூவர் உள்நாட்டினர்.

இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சு மது பான விநியோகஸ்தர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஆடவர்கள் சுங்கை பூலோ, கிள்ளான், அம்பாங், பந்திங், கோலாலம்பூர் மருத்துவமனைகளில் கிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், சுங்கை பூலோ கம்போங் பாருவிலுள்ள ஒரு மளிகைக்கடையில், இந்த நச்சுத்தன்மைக்கு தொடர்பான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அந்த கடை நடத்துனர் வெளிநாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker