Latestமலேசியா

‘நீ திருடன்’ என்று முகத்துக்கு நேராக சொன்னால் கூட சிரிக்கிறார்களே! –மகாதீர் வேதனை

கோலாலம்பூர், செப்.20- ஜப்பானியர்கள் தங்களின் தோல்விகளை கண்டு வெட்கித் தலைக் குனிந்து, அதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, தங்களின் நாடு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவுறுத்தினார்.

மலேசியர்கள் பலர், தோல்வியை ஒரு வெட்கத்திற்குரிய விஷயமாக கருதுவதில்லை என்று சுட்டிக் காட்டிய அவர், “இப்போதெல்லாம் பலர், சிறைக்குச் சென்றால் கூட சிரித்துக் கொண்டே செல்கின்றனர். நீ திருடன் என்று பலர் முகத்திற்கு நேரே கூறினால் கூட, சிரித்துக் கொண்டே இருக்கின்றனர்” என்று அவர் கூறினார்.

தோல்வியை குறித்து பயம் கொண்டால் மட்டுமே, தோல்வி அடைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில், அனைவரும் வெற்றியை நோக்கி நடை போட முடியும். தோல்வி தானே என்று சாதாரணமாக நினைக்கும் எண்ணத்தை அனைவரும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மகாதீர் வலியுறுத்தினார்.

ஜப்பானியர்கள் தோல்வியைக் கண்டு கூனிக் குறுகி விடுவார்கள். முந்தைய காலத்தில், ஜப்பானிய கலாச்சாரத்தில் தோல்வியினால் வெட்கி தற்கொலை செய்துக் கொள்வார்கள் என்று பிரதமர் சுட்டிக் காட்டினார்.

“மலேசியப் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு வெட்கம், தோல்வி குறித்து சிறு வயது முதற்கொண்டே சொல்லித் தர வேண்டும். தப்புச் செய்தால், அது குறித்து வெட்கப் பட வேண்டும் என்று பெற்றோர்கள் நினைவுறுத்த வேண்டும்.

“பிள்ளைகளுக்கு திருடுவது தவறு என்று சொல்லிக் கொடுங்கள். அவ்வாறான எண்ணத்தை சிறு வயதில் நாம் பிள்ளைகளின் எண்ணத்தில் புகுத்தினால், அவர்கள் என்றும் அந்தத் தீய பழக்கத்தை செய்ய மாட்டார்கள்.

“நாம் அனைவராலும் திருட முடியும். ஆனால், திருடுவது தவறு என்றுதானே நாம் திருடாமல் இருக்கிறோம்? சிலர் திருடுவது தவறு என்று நினைப்பது இல்லை போலும். அதனால் தாம், திருடினாலும், அவர்கள் வெட்கப் படுவதில்லை” என்று மகாதீர் சொன்னார்.

ஆசிரியர்களும் தங்களின் மாணவர்களுக்கு தீய பழக்கங்கள் எவை என்பது குறித்து பாடம் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker