Latestஉலகம்

ஈரானில் தாக்குதல்: ‘உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள்!’ -அமெரிக்கா

நியூயார்க், செப்.24- “உங்களின் இராணுவ அணிவகுப்பின் போது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கான பின்னணிக் காரணங்கள் என்ன? எனத் தெரிந்து கொள்ள வேண்டுமா? முதலில் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ஈரான் அதிபர் ஹசான் ரொஹானிக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்தது.

ஈரானில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு, அமெரிக்காவின் வம்புக்கு இழுக்கும் பின்னணியே காரணம் என்றும் முன்னாள் ஈராக் அதிபர் சடாம் உசேனுக்கு நேர்ந்த கதிதான் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் ஏற்படும் என்றும் அதிபர் ரொஹானி நேற்று முன்தினம் சாடியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்காவின் ஐநாவுக்கான சிறப்புத் தூதர் நிக்கி ஹாலி, நீண்ட காலமாக அதிபர் ரொஹானி ஈரான் மக்களை அடக்குமுறை ஆண்டு வருகிறார். அதன் விளைவு தான் இந்தச் சம்பவம் என்றார்.

ஈரானுக்கு கிடைக்கும் எல்லா வருமானத்தையும் இராணுவத்திற்காகவே ரொஹானி செலவிட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறார்கள். எனவே இத்தகைய பயங்கரவாதம் எங்கிருந்து முளைத்தது என்பதை ரொஹானி தனது சொந்த இடத்தில் தான் தேடிப்பார்க்க வேண்டும் என்று நிக்கி ஹாலி சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை. அனைத்துலக பயங்கரவாதத்தை தடுக்கும் முயற்சியை மட்டுமே அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. எனவே எங்களை குறை கூறாமல் உங்கள் முகத்தை முதலில் கண்ணாடியில் பாருங்கள் என்று ரொஹானிக்கு நிக்கி ஹாலி அறிவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker