Latestமலேசியா

உதவியாளருடன் கள்ளத் ‘தொடர்பா?’ மறுத்தார் துணையமைச்சர் முனீரா!

கோத்தாகினாபாலு, செப்.24- தம்முடைய அரசியல் உதவியாளருடன் தமக்கு ‘தொடர்பு’ இருப்பதாக இணைய பதிவு இதழாசிரியர் ஒருவர் தனது பதிவில் வெளியிட்டுள்ள செய்தியை துணையமைச்சர் முனீரா மஜிலிஸ் முற்றாக மறுத்தார்.

இன்னொருவரின் குடும்ப விவகாரங்களில் முனீரா மஜிலிஸ் தலையிட்டுள்ளதாக அண்மையில் அந்த இணைய இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கோத்தா பெலுட் நாடாளுமன்ற உறுப்பினருமான முனீரா, தம்முடைய முகநூலில் இந்தத் தகவலை நிராகரித்துள்ளார்.

திருமணமானவரான தம்முடைய உதவியாளருடன் தமக்கு தொடர்பு இருப்பதாக வெளியிடப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலன உரையாடல் பதிவுகள் மூலம் அந்த உதவியாளரின் மனைவி, இந்த விவகாரத்தை கண்டு பிடித்து விட்டதால் கணவரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்று அந்தச் செய்தி கூறியது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிலும் எனக்குத் தொடர்பு கிடையாது. எந்த வகையிலும் இந்தப் பிரச்னையில் எனக்கு சம்பந்தமில்லை. நான் பொது வாழ்க்கையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட இணைய ஏட்டாளர் என்னை இழிவுப் படுத்த முயற்சித்து உள்ளார் என்றார் அவர்,

இத்தகைய பொய்களின் வழி என் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார் என்று எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான துறைகளுக்கான துணையமைச்சரான முனீரா குறிப்பிட்டுள்ளார்.

சபா வாரிசான் கட்சியின் இளம் மகளிர் அணித் தலைவியான முனீரா, தம்முடைய களங்கத்தைத் துடைக்கும் நோக்கில் போலீசிலும் இது குறித்துப் புகார் செய்துள்ளார். போலீசார் இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காகவே இந்தப் புகாரைச் செய்ததாக முனீரா சொன்னார்.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker