Latestமலேசியா

தகவல் தொழில்நுட்பம்: இந்தியர்களின் ‘உயரம்’ போதாது!- வேதா

கோலாலம்பூர்,செப்.27- தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறையின் அனுபவங்களில் மலேசிய இந்தியர்கள் இன்னும் குறிப்பிட்ட எல்லையை எட்டவில்லை என பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் வேதமூர்த்தி கூறினார்.

எனவே, மலேசிய இந்தியர்கள் உள்நாட்டில் கிடைக்கின்ற வர்த்தக வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் பன்னாட்டு வர்த்தக சந்தையிலும் ஊடுறுவ வேண்டும். குறிப்பாக இளந்தொழில் முனைவர்கள் வர்த்தகக் கட்டமைப்பை விரிவுப் படுத்த வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவால் தொடர்பு, தொழில்நுட்பத் துறையில் பீடுநடை முடியுமானால், அந்நாட்டு இந்தியர்களால் உலகத் தரம் வாய்ந்த பொருட்களை தயாரிக்க முடியுமானால், ஏன் மலேசிய இந்தியர்களால் மட்டும் அது முடியவில்லை என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

ஆசிய பசிபிக் தொழில்நுட்ப புத்தாக்கப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மலேசிய இந்தியர் இலக்கவியல் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு வேதமூர்த்தி உரை நிகழ்த்தினார்.

இன்றைய வர்த்தக உலகம் மிகவும் சிறுத்துவிட்டது. உலக மயம் என்னும் புதிய தாக்கத்தினால் இது நடக்கவில்லை; மாறாக, தொழில்நுட்ப வளர்ச்சியின் அதிரடித் தாக்கத்தால் இன்றைய வணிக உலகம் மிகவும் சிறியதாகி விட்டதென்றார்.

மலேசிய இந்தியர்கள் தங்களின் வர்த்தக தொழிழ்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ள இதுபோன்ற மாநாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைப் புரியும் என்பதால் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த அனைத்துத் தரப்பினரையும் பாராட்டுவதாக அமைச்சர் கூறினார்.

இலக்கவியல் வர்த்தக தொழில்நுட்பத்தைக் காட்டிலும் மின்னியல் வர்த்தகப் பரிவர்த்தனையில் பாதுகாப்பு அம்சம் சற்று அதிகம். எது எவ்வாறாயினும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுத்தும் மலேசிய இந்தியர்கள் இலக்கவியல், மின்னியல் சார்ந்த வர்த்தகத்தில் நாட்டம் கொள்ள வேண்டும்.

அரசாங்கமும் மின்னியல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இலக்கவியல் அற்ற வர்த்தகக் கட்டமைப்பை(DFTZ) கடந்த 2017-இல் அறிமுகப்படுத்தியது. இதன்வழி, 2015-ஆம் ஆண்டு அளவில் ஏறக்குறைய 60,000 வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்றும் 38 பில்லியன் டாலர் அளவுக்கு சிறு-நடுத்தர தொழில்களின் மூலம் ஏற்றமதி செய்ய முடியும் என்றும் அரச இலக்கு நிர்ணயித்துள்ளது.

இளைஞர்களும் பெண்களும் வர்த்தகத்தில் குறிப்பாக இணைய வர்த்தகத்தில் அதிகமாக ஆர்வம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அமைச்சர், மலேசிய இந்தியர்களின் வர்த்தகக் கட்டமைப்பு இன்னும் விரிவடைந்தால் அது சமுதாயத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது என்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker