Latestமலேசியா

நெகிரி மாநிலத்தில் பிரிபூமி முற்றாக கலைப்பு! மறு சீரமைப்பு – முகைதீன்

பெட்டாலிங் ஜெயா, செப்.27- நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள பிரிபூமி பெர்சத்து (பிபிபிஎம்) கட்சி பிரிவுகள் அனைத்தும் கலைக்கப் படுகின்றன. அந்த மாநிலத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

அந்த மாநிலத்தில் பிரிபூமி கட்சியை மறுசீரமைப்பு செய்யும் பணிகள், மூத்த அரசியல்வாதியான டான்ஶ்ரீ டாக்டர் ராயிஸ் யாத்திமிடம் வழங்கப் படுவதாக அக்கட்சித் தலைவரான டான்ஶ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துக் கொண்டார்.

கட்சியின் அமைப்பு விதிகளின் கீழ், நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள பிபிபிஎம் கட்சி கிளைகள் கலைக்கப் படுகின்றன. கிளைகள் மற்றும் பிரிவு நிலைகளில் புதிய நியமனங்கள் செய்யப்படும் என்று முகைதீன் கூறினார்.

“இன்னும் சில நாட்களுக்குள், கிளைகள் மற்றும் பிரிவு நிலைகளுக்கான அலுவலக பொறுப்பை ஏற்கவிருப்போரின் பெயர்கள் பட்டியலிடப் படும். அங்கு எழுந்துள்ள பிரச்சனைகளை கையாளுவதற்கு இதுவே சிறந்த வழி” என்று அவர் சொன்னார்.

இதனிடையில், சிலாங்கூர் மாநிலத்தின் அம்பாங் மற்றும் சுபாங் பிரிவு நிலைகளையும் கலைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“அவ்விரு பிரிவு நிலைகளிலும் பல்வேறான பிரச்சனைகள் எழுந்துள்ளன. அப்பிரச்சனைகள் கட்சியை பாதிக்கக் கூடும் என்ற அடிப்படையில், அவ்விரு பிரிவுகளையும் கலைக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம்” என்று முகைதீன் கூறினார்.

ரமலான் மாதச் சந்தை (பஸார்) கடைகளை வாடகைக்கு விடுவது தொடர்பில், தங்களின் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்திய பிபிபிஎம் புக்கிட் பிந்தாங் கிளைத் தலைவர்கள் மீது அக்கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையில், பக்காத்தான் ஹராப்பான் கட்சியுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை செயல்படுத்த தாங்கள் தயாராக உள்ளதாக அம்னோ தேசிய தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளதை தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று முகைதீன் கூறினார்..

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker