Latestமலேசியா

போலீஸ்காரர் மனைவி கொலை: நாகார்ஜுனுக்கு தூக்குத் தண்டனை

தைப்பிங், செப்.27- கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், போலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவியை கொலைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 22 வயது எ. நாகார்ஜுன் என்ற ஆடவனுக்கு தூக்குத் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அந்த ஆடவனின் கூட்டாளியான 20 வயது ஆடவனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. அவ்விரு ஆடவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானதால் அவர்களுக்கு அத்தண்டனைகள் விதிக்கப் படுவதாக நீதிபதி ஆணையர் அஸ்மாடி ஹுசேன் கூறினார்.

“அந்தக் கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி, அச்சம்பவம் நிகழ்ந்த போது 16 வயது சிறுவனாக இருந்ததால், அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியாது. அதுமட்டுமல்லாது, அவரின் குற்றம் பதிவு செய்யப்படவில்லை.

“அதனால், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப் படுகிறது. மாநில சுல்தான் அவர் எவ்வளவு காலம் சிறையில் அடைக்கப் பட வேண்டும் என்று விரும்புகிறாரோ, அதுவரை அக்குற்றவாளி சிறையில் அடைக்கப் படுவார்” என்று அஸ்மாடி சொன்னார்.

“இக்கொலையில் சம்பந்தப் பட்டுள்ள மற்றுமொரு குற்றவாளியான நாகார்ஜுன் -இரண்டாவது குற்றவாளியான, நீங்கள் தூக்கிலிடப் படுவீர்” என்று அவர் தீர்ப்பளித்தார்.

உலு கிந்தாவிலுள்ள தாமான் தஞ்சோங் இமாஸ் என்ற பகுதியிலுள்ள வீடொன்றில், கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியன்று நள்ளிரவு 12.30 மணியிலிருந்து 2 மணிக்குள், இஸா அப்துல்லா என்ற 52 வயது மாதுவை அவ்விரு ஆடவரும் கொலைச் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவ்விருவரும் குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப் பட்டனர். அவர்களுக்கான தீர்ப்பு அளிக்கப் பட்ட போது, கொலையுண்ட இஸாவின் ஒரே மகனான ஜூல்ஃபாட்லி சாலேஹுடின் (வயது 30) நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார்.

“அவர்கள் செய்த குற்றத்திற்கு தக்கத் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. உயிரற்ற நிலையில் கிடந்த என் தாயாரின் உடனை நான் தான் முதலில் கண்டேன். இன்றுவரை, அச்சம்பவம் எனக்குள் ஒருவித சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து நான் இன்று வரை மீளவில்லை” என்று அவர் சொன்னார்.

இதனிடையில், தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள நாகருஜூன் என்ற அந்த ஆடவர் திருந்தி வாழ நீதிமன்றம் வாய்ப்பை வழங்கியிருக்கலாம் என்று அவரின் வழக்கறிஞர் டத்தோ நரன் சிங் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker