Latestமலேசியா

ஊழல்: 6 குடிநுழைவு அதிகாரிகளை கைது செய்தது எம்.ஏ.சி.சி!

கோலாலம்பூர், செப்.28- ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக  கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு குடிநுழைவு துறை அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

அந்த ஆறு குடிநுழைவு துறை அதிகாரிகளுக்கு உதவிப் புரிந்ததாக நம்பப்படும் ஏஜெண்டு ஒருவரையும், எம்.ஏ.சி.சி அதிகாரிகள் இன்று காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள அந்த எழுவரும், 15 மனிதக் கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் கறுப்பு பட்டியலிடப் பட்டவர்கள், நாட்டிலிருந்து வெளியேற மற்றும் உள்நுழைவதற்கு உதவிப் புரிந்துள்ளனர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, பயங்கர குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் நாட்டின் இதர அனைத்துலக விமான நிலையங்கள் வாயிலாக நாட்டிலிருந்து வெளியேற மற்றும் கள்ளத்தனமாக உள்நுழைய அந்த எழுவர் உதவிப் புரிந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

“பல்வேறான குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட சுமார் 200 பேரை, அந்தக் கும்பல் ஒவ்வொரு மாதமும் நாட்டினுள் நுழைய அனுமதித்துள்ளது” என்று தகவல் வட்டாரம் தெரிவித்தது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், வெளியேறும் மற்றும் உள்நுழையும் பகுதியை பாதுகாக்க நியமிக்கப் பட்டிருக்கும் அந்த குடிநுழைவு துறை அதிகாரிகள், இந்த மனிதக் கடத்தல் சம்பவங்களை கண்டும் காணாது போல் இருந்து விடுவார்கள்.

அதற்கு ஈடாக, அவர்களுக்கு அதிகத் தொகை லஞ்சமாக மனிதக் கடத்தலில் ஈடுபடும் கும்பல்கள் வழங்கியுள்ளன. அந்தத் தொகையை, அந்த அதிகாரிகள், ஏஜெண்டுகளுடன் பங்குப் போட்டுக் கொள்வர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த அதிகாரிகளின் ஆடம்பர வாழ்க்கை முறையை கண்டு சந்தேகம் அடைந்த ஒருவர், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் அது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அந்த ஆறு குடிநுழைவு துறை அதிகாரிகளில் சிலர், ஒரு மாதத்திற்கு ரிம.300,000 வரை ‘சம்பாதித்து’ வந்துள்ளனர்.

அந்தக் கைது நடவடிக்கை நடைபெற்றது என்பதை ஒப்புக் கொண்ட கோலாலம்பூர் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் இயக்குநர் ரஸாலியா அப்துல் ரஹ்மான், அது குறித்து மேல் தகவல்களை தெரிவிக்க மறுத்து விட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker