Latestமலேசியா

அம்னோவின் பதிவு ரத்தாகக் கூடும்! –ஸாஹிட் எச்சரிக்கை

கோலாலம்பூர், அக்.1- அம்னோ கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப் பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி,  அதன் பதிவு ரத்து செய்யப் படக் கூடிய அபாயம் இருப்பதாக  அம்னோவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி எச்சரித்தார்.

“கட்சித் தலைவர்கள் அல்லது உறுப்பினர்கள் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று பல்வேறான தகவல்கள் வெளியாகியுள்ளன.

“கட்சி அல்லது கட்சி உறுப்பினர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையானது நாட்டின் சட்டத் திட்டங்களை பின்பற்றி எடுக்கப் பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று அம்னோ பொதுக் கூட்டத்தில் அவர் கூறினார்.

அம்னோவின் அறங்காவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் கையிருப்பில் உள்ள கட்சி நிதியை மீட்கும் பணியில் அக்கட்சி இறங்கவுள்ளதாக ஸாஹிட் தெரிவித்துக் கொண்டார்.

“இந்தப் பொறுப்பை நான் பொருளாளர் டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோரிடம் ஒப்படைத்துள்ளேன். மீட்கப் படும் பணம் குறித்த தகவல்களை உச்சமன்றத்தில் சமர்ப்பிப்பார். “அவ்வாறு செய்வதன் வாயிலாக, கட்சியின் நிதி குறித்த தகவல்கள் அனைவருக்கும் தெரிய வரும்” என்று அவர் சொன்னார்.

“எங்களிடம் பில்லியன் மதிப்புக் கொண்ட சொத்துகள் மற்றும் பணம் உள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், எங்களின் ஆய்வின் வாயிலாக, கட்சியின் சொத்து அவ்வளவு அதிகம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது” என்றார் அவர்.

இதனிடையில், முன்னாள் பிரதமர் ஒருவர், அம்னோவின் சொத்துகளை பராமரித்துக் கொள்ள ஒரு நபரை தேர்ந்தெடுத்திருந்தார் என்றும், அந்த நபர் மீது அம்னோ நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் ஸாஹிட் கூறினார்.

ஆனால், அந்த முன்னாள் பிரதமர் யார் என்பதையும், அந்த நபரின் பொறுப்பிலிருந்த சொத்துகளின் நிலைமை என்ன என்பதை ஸாஹிட் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker