
கியூபெக், அக்.1-கனடாவில் குறட்டை விட்டு தூங்கிய பெண்ணின் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. அந்தப் பெண்ணால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டதால் அவர் மருத்துவச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
கியூபெக் மாநிலத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்
பெண்ணொருவர் வாடகைக்கு குடியிருந்த நிலையில் அவருக்கு தூங்கும் போது அதிகமான குறட்டை வரும். தூங்க ஆரம்பித்தவுடன் இந்தக் குறட்டை சத்தம் அங்கிருப்பவர்களை அதிகத் தொந்தரவு செய்திருக்கிறது.
இது குறித்து அப்பெண்ணிடம் பேசிய வீட்டு உரிமையாளர் குறட்டை
பிரச்சனை குறித்து மருத்துவரை ஆலோசிக்க கூறியுள்ளார். ஆனால், அந்தப்பெண் அதை கேட்காத நிலையில், குறட்டை தொந்தரவு தொடர்ந்தது.
இதனால் கோபமடைந்த உரிமையாளர் நீதிமன்றத்தை அணுகி பெண்ணை வீட்டை காலி செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
அதே சமயம் அப்பெண்ணும் வீட்டு உரிமையாளர் தன்னை தொந்தரவு செய்வதாகவும் அவரது செயலால் தன்னால் நிம்மதியாக தூங்கவே முடியவில்லை என்று வழக்கும் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், குறட்டை பெண் அளித்த புகாரை மறுத்து விட்டனர். அதோடு குறட்டை சத்தம் அளவுக்கு அதிகமாகவே கேட்பதாகவும் கூறினர். இறுதியாக குறட்டைக்காக மருத்துவரை சந்தித்துச் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என அவருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.