Latestமலேசியா

விலகிய எம்பி.க்கள் மீது வழக்கு: -நஜிப் முழு ஆதரவு!

கோலாலம்பூர், அக்.1- அம்னோவிலிருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் அம்னோவின் முடிவினை, தாம் ஆதரிப்பதாக கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார்.

கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளவர்கள் மீது தார்மீக ரீதியில் நடவடிக்கை எடுக்கும் கடமை அம்னோவிற்கு உண்டு என்று நஜிப் கூறினார்.

“அம்னோவின் கீழ் தேர்தலில் போட்டியிட்டு, அதன் வாயிலாக வெற்றியை அடைந்த வேட்பாளர்கள் மீது, நன்னெறி ரீதியில் நடவடிக்கை எடுக்கும் உரிமை, அம்னோவிற்கு உண்டு.

“அவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது, அவர்களுக்குத் தேவையான பண உதவி மற்றும் ஆதரவுகளை அம்னோதான் வழங்கியது” என்று நஜிப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அம்னோவின் கீழ் போட்டியிட்டு, மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கட்சியிலிருந்து விலகிக் கொண்ட (முன்னாள்) உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, நோட்டீஸ் அவர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக, அம்னோ கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி கூறினார்.

அந்த மக்கள் பிரதிநிதிகள், கட்சியிலிருந்து மட்டுமல்ல, தங்களின் தொகுதிகளில் இருந்தும் விலகிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஸாஹிட் சொன்னார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர், ஐந்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“அரசியலில் சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப் பட வேண்டும். ஒருவரை கட்சியில் தொடர்ந்து நீடிக்க வைக்கவோ, அல்லது வெளியேற்றவோ, நாம் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்று நஜிப் நினைவுறுத்தினார்.

இதனிடையில், கட்சியிலிருந்து விலகிக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக, கட்சிக்கு எவ்வாறான நன்மை ஏற்படும் என்று அம்னோவின் ஆலோசனை மன்ற தலைவர் துங்கு ரஸாலி ஹம்ஸா கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியிலிருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் ஸாஹிட், அதில் வெற்றி பெறுவது எளிதான காரியமல்ல என்று துங்கு ரஸாலி குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker