Latestமலேசியா

துடைப்பத்தை ‘பரிசாக’ தந்து அவமதித்த அந்த நாளை நினைத்து அழுதார், புதிய மேயர்!

கோலாலம்பூர், அக்.2- இன்று ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் தலைமையகத்தில், டத்தோ நோர் ஹிஷாம் அகமட் தஹ்லான் கோலாலம்பூர் மேயராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அவரின் சத்தியப் பிரமாண நிகழ்வை முன்னிட்டு, சமூக வலைத்தளங்களில் கடந்த 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் ஒன்று பரவலாக பகிரப் பட்டு வருகிறது. அது குறித்து செய்தியாளர்கள், நோர் ஹிஷாமிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் உணர்ச்சி வசப்பட்டு, கண்ணீர் வடித்தார்.

“இவரை தெரிகிறதா? கடந்த 2007-ஆம் ஆண்டில், கீர் தோயோ இவருக்கு துடைப்பத்தை ‘பரிசாக’ வழங்கினார். இன்று இவர் கோலாலம்பூர் மேயராக பதவி ஏற்கிறார்” என்ற தகவலைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் நோர் ஹிஷாமின் புகைப்படங்கள் பகிரப் பட்டு வருகின்றன.

கடந்த 2007-ஆம் ஆண்டு, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில், சிறப்பான சேவையை வழங்காத இலாகாக்களின் தலைவர்களை சிறுமைப் படுத்தும் வகையில், அப்போதைய சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கீர் தோயோ துடைப்பத்தை ‘பரிசாக’ வழங்கினார்.

அந்தத் துடைப்பத்தை பெற்றுக் கொண்டவர்கள் பட்டியலில் நோர் ஹிஷாம் அகமட் தஹ்லானும் அடங்குவார். அச்சம்பவம் நிகழ்ந்த வேளையில், உலு சிலாங்கூர் மாவட்ட அதிகாரியாக மூன்று மாதங்களுக்கு முன்னரே நோர் ஹிஷாம் பொறுப்பேற்றிருந்தார்.

2006-ஆம் ஆண்டில், அம்மாவட்டத்தின் வருவாய் 40 விழுக்காடு மட்டுமே சேகரிக்கப் பட்டிருந்தது. அது ஏற்புடையதாக இல்லை என்றும், அந்தப் பொறுப்பில் இருந்த நோர் ஹிஷாம் சிறப்பாக செயல்படவில்லை என்று கூறி, கீர் தோயோ அவருக்கு துடைப்பத்தை வழங்கினார்.

அது மட்டுமல்லாது, அதேப் போன்று சிறப்பான சேவையை வழங்காத கிள்ளான் மாநகரக் கழக தலைவர் நாட்டில் இல்லாததால், அவரின் சார்பில் நோர் மேலும் ஒரு துடைப்பத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டார்.

அந்த நிகழ்வை நினைவு கூர்ந்து, கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் நோர், அழுதார். “நான் அந்தப் பொறுப்பு ஏற்று மூன்று மாதங்களில் அந்தத் துடைப்ப விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பான சேவையை வழங்காத பழியை தலைவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், அதனை நான் பெற்றுக் கொண்டேன்” என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker