Latestமலேசியா

இடைத் தேர்தல்: அதிகாரத் துஷ்பிரயோகம் நடக்காது! -அன்வார்

போர்ட்டிக்சன், அக்.3- அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப் பட்டுள்ள சிறப்பு சலுகைகள் மற்றும் தங்களின் அதிகாரங்களை தவறான வகையில் பயன்படுத்தக் கூடாது என்று பிகேஆர் கட்சித் தலைவரான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.

அந்த அமைச்சர்கள், குறிப்பாக, இடைத் தேர்தல் காலக் கட்டங்களின் போது அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடக் கூடாது என்று அவர் நினைவுறுத்தினார்.

நியாயமான வகையில் அந்த இடைத் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் அதே வேளையில், கடந்த பொதுத் தேர்தலில், விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்காத்தான் கூட்டணி செயல்படும் என்று அக்கூட்டணி பொது மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது மனைவியும், துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா, தனது கணவர் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில், அத்தொகுதிக்கு எவ்வித புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை என்பதை அன்வார் சுட்டிக் காட்டினார்.

“முந்தைய காலக் கட்டத்தில், ஒரு தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கும் பட்சத்தில், போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் சார்பில் பிரசாரம் செய்யும் அமைச்சர்கள், அந்தக் குறிப்பிட்ட தொகுதிகளுக்காக இஷ்டத்திற்கு பல புதிய திட்டங்களை அறிவித்துச் செல்வர்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

1990-ஆம் ஆண்டில், தாம் துணைப் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில், தனது மகளான நூருல் இஸ்ஸாவை பல்கலைக்கழகத்தில் சேர்த்து விடச் சென்ற போது, தாம் அரசாங்க வாகனத்தை பயன்படுத்தவில்லை என்பதை அன்வார் குறிப்பிட்டார்.

“நான் என் சொந்த காரை பயன்படுத்தினேன். ஆனால், எனது பாதுகாவலர்கள் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதால், அவர்கள் என்னைப் பின் தொடர்ந்தனர்.

“ஆகவே, அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker