Latestமலேசியா

அன்வாருக்காக போர்ட்டிக்சனில் பிரச்சாரம் செய்வேன்! – மகாதீர்

கோலாலம்பூர், அக்.5- போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் தாம் தலையிடப் போவதில்லை என்று இதுவரை கூறி வந்த பிரதமர் துன் டாக்டர் மகாதீர், தாம் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடவிருப்பதாக இன்று அறிவித்துள்ளார்.

தாம் அத்தொகுதி இடைத் தேர்தலில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று கூறியதை பொதுமக்கள் விமர்சித்ததைத் தொடர்ந்து, தாம் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக மகாதீர் விளக்கமளித்தார்.

“பல தரப்பினர் பல்வேறான வகையில் என்னை சாடி வருகின்றனர். அதனால், நான் போர்ட் டிக்சனுக்குச் செல்லவிருக்கிறேன். நான் அன்வாருடன் சண்டைப் போட்டு விட்டதாகவும், அவர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை நான் ஆதரிக்கவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“அவற்றில் உண்மையில்லை என்பதை உணர்த்துவதற்காக நான் அங்குச் செல்ல விருக்கிறேன்” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதனிடையில், போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் இன்னும் களை கட்டவில்லை என்றும், அத்தொகுதி வாக்காளர்கள் மத்தியில் ஒருவித சோர்வு தெரிகின்றது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அக்டோபர் 13-ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் அத்தேர்தலில், அஞ்சல் வாயிலாக வாக்களிக்க முடியாது என்பதை சுட்டிக் காட்டி, மற்ற மாநிலங்களில் வசித்து வரும் நெகிரி செம்பிலான் மாநில வாசிகள், இந்த இடைத் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று மகாதீர் கேட்டுக் கொண்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதியன்று, போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் அன்வாருக்காக தாம் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று மகாதீர் அறிவித்தார். அதே வேளையில், தனது ஆதரவு அன்வாருக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker