Latestமலேசியா

கே.எல்.ஐ.ஏ-2இல் ‘குடித்தனம்’: சிரியா அகதியை திருப்பி அனுப்பப் படுவார்!

கோலாலம்பூர், அக்.5- கடந்த மார்ச்சு மாதம் தொடங்கி, இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த 7 மாதங்களாக தங்கி இருந்ததற்காக அக்டோபர் 2-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட சிரியா நாட்டைச் சேர்ந்த ஆடவர், தனது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப் படுவார் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.

கம்போடியா நாட்டிலிருந்து வெளியேற்றப் பட்ட ஹசான் அல் கொந்தார் என்ற அந்த ஆடவர், கடந்த ஏழு மாதங்களாக இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் உள்நாட்டு பரிமாற்ற ஓய்வறையில் குடித்தனம் நடத்தி வந்ததற்காக 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

பல்வேறான ஆசியா நாடுகளில் வசிக்க ஹசானுக்கு வாய்ப்பு வழங்கப் பட்ட போதிலும், தாம் கனாடாவில் மட்டுமே வசிக்க எண்ணம் கொண்டுள்ளதாக ஹசான் கூறியதால், அவர் தமது நாட்டிற்கு திருப்பி அனுப்பப் படுவார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஹசான் கனாடாவில் வசிக்க வேண்டும் என்றால், அதற்கு அவர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. அவர் இன்னும் 24 மாதங்களுக்கு இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வசிக்க மலேசியாவால் அனுமதி வழங்க முடியாது.

“கனாடாவிற்கு மட்டுமே செல்வேன் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு, இதர ஆசிய நாடுகளில் வசிக்க ஹசான் ஒப்புக் கொள்வார் என்று நாங்கள் எதிர் பார்க்கிறோம்” என்று உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ முகமட் அஸிஸ் ஜம்மான் செய்தியாளர்களிடம் கூறினார்.

சிரியாவிற்கு தாம் திரும்பிச் சென்றால், அந்நாட்டு அரசாங்கம் தன்னை வலுக்கட்டாயமாக இராணுவத்தில் இணைத்து விடும் என்ற அச்சத்தில் தாம் சிரியாவிற்கு திரும்பி செல்லவில்லை என்று ஹசான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker