Latestமலேசியா

கூடுதலாக பிரம்படிகள் தாருங்கள்! -நீதிபதியிடம் கோரிய குற்றவாளி!!

கோலாலம்பூர், அக்.11- விபச்சாரத்திற்கு இடைத் தரகராக தொழில் செய்து வந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆடவன் ஒருவன், தனக்கு விதிக்கப் பட்ட சிறைத் தண்டனை குறைக்கப் பட வேண்டும் என்றும், அதற்கு பதிலாக தமக்கு அதிகப் படியாக பிரம்படிகள் வழங்கப் பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினான்.

ரோபின் சோவ் யான் புன் என்ற 30 வயது ஆடவன், விபச்சாரத்திற்கு இடைத் தரகராக தொழில் புரிந்த குற்றத்திற்காக, அவனுக்கு ஈராண்டு சிறைத் தண்டனை மற்றும் ஒரு பிரம்படியை கீழ் நீதிமன்றம் விதித்தது.

அவனுக்கு விதிக்கப் பட்ட தண்டனை மிகக் குறைவு என்ற அடிப்படையில், அவனின் தண்டனைக் காலம் ஐந்து ஆண்டுகளாக அதிகப் படுத்தப் பட வேண்டும் என்றும், அவனுக்கு மூன்று பிரம்படிகள் விதிக்கப் பட வேண்டும் என்றும், அரசு தரப்பு உயர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.

தனக்கு குறைந்தப் பட்ச சிறைத் தண்டனை விதிக்கப் பட வேண்டும் என்றும், அதற்கு பதிலாக பிரம்படிகளின் எண்ணிக்கையை நீதிமன்றம் அதிகரித்துக் கொள்ளலாம் என்று ரோபின் தழுதழுத்த குரலில் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லாவிடம் கோரினான்.

தாம் தவறான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், இதுவே தமது முதல் குற்றம் என்ற அடிப்படையில், நீதிமன்றம் தம்மீது கருணை காட்ட வேண்டும் என்றும் அந்த ஆடவன் கேட்டுக் கொண்டான்.

இருந்த போதிலும், கூடுதல் காலம் சிறையில் தண்டனையை செலுத்தினால் மட்டுமே, ஒருவர் உண்மையாகவே தனது தவறை உணர்வார் என்ற அடிப்படையில், நீதிபதி அஸ்மான் அவனின் கோரிக்கையை மறுத்து விட்டார்.

“விதிக்கப் படும் தண்டனையானது உனது மனதில் பயத்தை ஏற்படுத்த வேண்டும். நீதிமன்றத்தால் விதிக்கப் படும் தண்டனை உனது மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்தாவிடில், அத்தண்டனை பயனற்றதாகி விடும்.

“நீ அதிக காலம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இதன் வாயிலாக, நீ திருந்தி வாழ வேண்டும்” என்று அஸ்மான் அந்த ஆடவனிடம் தெரிவித்தார்.

கடந்த 25-ஆம் தேதி பிப்ரவரி மாதம், தாமான் ஶ்ரீ ஹர்தாமாஸ் என்ற பகுதியில், தாம் விபச்சாரத்திற்கு இடைத் தரகராக தொழில் புரிந்ததை ரோபின் ஒப்புக் கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக அக்குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, குற்றவியல் சட்டத்தின் 372 (1) பிரிவின் கீழ், 15 ஆண்டு வரை சிறைத் தண்டனை மற்றும் பிரம்படிகள் விதிக்கப் படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker