
சென்னை அக்.11- பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது வைத்து இருக்கும் குற்றச்சாட்டுகள் பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது. பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக நிறைய குற்றச்சாட்டுக்ளை வைத்து வருகிறார்.
சில பிரபலங்கள் குறித்து வரும் பாலியல் புகார்களை பதிவிட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்து குறித்தும் பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். குற்றச்சாட்டு 2005 அல்லது 2006 இல் சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்கள் பற்றிய நிகழ்வு ஒன்றுக்காக சின்மயி பாட சென்ற போது இச்சம்பவம் நடந்ததாக அவர் கூறியுள்ளார்.
அப்போது கவிஞர் வைரமுத்து சின்மயியை அவருடைய அறைக்கு அழைத்ததாக கூறியுள்ளார். இதனால் அன்று இரவே சுவிட்சர்லாந்தில் இருந்து கிளம்பி விட்டதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தான் சின்மயி வைத்த முதல் குற்றச்சாட்டு ஆகும்.
வைரமுத்து இதற்கு நேற்று விளக்கம் அளித்தார். அதில் அறியப் பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிமாகி வருகிறது என்பது தான். அண்மைய காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுக்குள் இதுவும் ஒன்று உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை உண்மையைக் காலம் சொல்லும்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த டிவிட்டுக்கு பதிலளித்த சின்மயி, “பொய்யர்” என்று வைரமுத்துவை குறிப்பிட்டுள்ளார். 2005 அல்லது 2006 இல் இச்சம்பவம் நடந்ததாக சின்மயி கூறியுள்ளார். ஆனால் அதன் பின் எப்போதும் போல டுவிட்டரில் வைரமுத்துவுடன் சின்மயி பேசி வந்துள்ளார்.
2014 ஆல் வைரமுத்து பத்மபூஷன் விருது வாங்கியதற்கு கூட “வாவ்” என்று வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதற்கு தற்போது சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.
அதில் ஆமாம் நான் எப்போதும் புதிய படம் வெளியானால் நான் யாருடன் பாடினேனோ அதை குறிப்பிடுவேன். அதனால் குறிப்பிட்டேன். ஆம் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்தேன் மக்கள் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதனால் தெரிவித்தேன்.
இந்நிலையில் சின்மயி 2014 இல் தனது திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்துள்ளார். அந்நிகழ்வில் அவரது காலில் விழுந்து முகத்தை வைத்து சின்மயி மரியாதை செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. இது பற்றி வலைத்தளவாசிகள் சின்மயிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு சின்மயி விளக்கம் அளித்துள்ளார். நான் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை. வைரமுத்துவை கல்யாணத்திற்கு அழைக்கவில்லை என்றால் பிரச்சனையாகும். கேள்வி கேட்பார்கள் அதனால் அப்போது அவரை திருமணத்திற்கு அழைத்தேன் என்கிறார்.
மேலும் காலில் விழுந்தது குறித்தும் விளக்கியுள்ளார். நான் அங்கு எல்லோருடைய காலிலும் விழுந்தேன். எனக்கு அங்கு வேறு வழி தெரியவில்லை. வைரமுத்து காலில் மட்டும் விழவில்லை என்றால் பிரச்சனை ஆகியிருக்கும் அதனால் அப்படி செய்தேன் என்கிறார்.
இந்நிலையில் வலது சாரி அமைப்புகள் வைரமுத்துக்கு எதிராக உள்ளன என்பதால் இன்னொரு கேள்வியை எழுந்துள்ளது. ஆண்டாள் விவகாரம் காரணமாக வைரமுத்துவை வலது சாரி கொள்கை கொண்டவர்கள் திட்டுகிறார்கள் இதனால் சின்மயின் இந்தப் புகார் பொய்யான புகார் என்று விமர்சிக்கப்படுகிறது.
இவ்வளவு நாள் ஏன் சின்மயி இதை வெளியே சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. 13 வருடமாக இந்த விஷயத்தை சின்மயி வெளியே சொல்லவில்லை. இப்போது ஏன் புகார் அளிக்கிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் அவர் விளக்கம் அளித்து உள்ளார். அதில் ”ஆம் இவ்வளவு நாளாக எனக்கு இதை சொல்ல தைரியம் இல்லை. அதற்கான சூழ்நிலை வரவில்லை. இப்போது தான் வீட்டில் கணவரிடம் சொன்னேன். அதன் பின்னரே தைரியம் வந்தது. எல்லோரிடமும் சொல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து மீது மட்டுமில்லாமல் சில கர்நாடக சங்கீத வித்வான்கள் மீதும் இவர் குற்றச்சாட்டு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.