
போர்ட்டிக்சன், அக்.11- சிறைச்சாலைக்குள் இருக்கும் போது அங்கே எப்படி தாக்குப் பிடிப்பது? என்ற வித்தையை தாம் முன்னாள் தலைவர்களுக்குச் சொல்லித் தரத் தயாராக இருப்பதாக பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
ஏனெனில், தாம் முன்பு இருந்த சிறையிலேயே இவர்களும் தஞ்சமடையக்கூடும் என்று பிரசாரக் கூட்டத்தில் நகைச்சுவையாக பேசிய போது அவர் குறிப்பிட்டார். அந்த சிறைச்சாலை அனுபவத்தை என்னிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புவோரில் முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அவருடைய துணைவியார் ரோஸ்மாவும் கூட இருக்கலாம் என்றார் அவர்.
நீதிமன்றம் குற்றவாளிகள் தான் எனத் தீர்ப்பு அளித்தால், யாராக இருந்தாலும், ரோஸ்மாவோ அல்லது நஜிப்போ யாராக இருந்தாலும், சிறைக்குள் எப்படித் தாக்குப்பிடிப்பது என்பதை விளக்க தம்மால் முடியும் என்று அன்வார் சொன்னார்.
முன்பு ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் அன்வார், இருமுறை தண்டிக்கப்பட்டு, சிறைவாசத்தை அனுபவித்த பின்னர், அரச மன்னிப்பு வழி விடுவிக்கப்பட்டார் அன்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடிக்கணக்கான ரிங்கிட் சம்பந்தப்பட்ட 1எம்டிபி நிதிமுறைகேடு மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகிய 30 குற்றச்சாட்டுக்களை நஜிப் எதிர்நோக்கி உள்ளார். அதேவேளையில் ரோஸ்மா 17 குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார்.