Latestமலேசியா

மகாதீர் பிரதமர் ஆவதை தடுக்க சுல்தான்கள் முயற்சி?- காதிர் ஜாசின்

கோலாலம்பூர்,அக்.11 – பிரதமர் பதவியில் மீண்டும் துன் மகாதீர் அமரக்கூடது என்பதற்காக மாநில சுல்தன்கள் பலர் பிரசாரம் செய்ததாக மூத்த பத்திரிகையாளரான ஏ.காதிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

தம்முடைய இணைய ‘கருத்துரை’ பக்கத்தில் அவர் மேற்கண்டவாறு எழுதியுள்ளார். பிரதமர் துன் மகாதீரின் ஊடக மற்றும் தொலைத் தொடர்பு ஆலோசகராகவும் காதிர் ஜாசின் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ்த் தலைமையாசிரியராக இவர் நீண்ட காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பிரதமர் பதவியை தமக்கு வழங்க, பேரரசர் ஐந்தாம் சுல்தான் முகம்மட் முன்வந்ததாக துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸீஸா கூறியிருந்தது குறித்து கருத்து வெளியிட்டபோதே காதிர் ஜாசின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசியலுக்குள் மீண்டும் மகாதீர் நுழைவதை தடுப்பதற்காக பல சுல்தான்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரசாரங்களில் ஈடுபட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றார் காதீர் ஜாசின்.

கடந்த மே மாதம் 9-ஆம் தேதி பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், என்ன நடந்தது என்பதை வான் அஸீஸா வெளிப்படையாக கூறியிருப்பதை தாம் வரவேற்பதாகவும், இதுதான் நடந்திருக்கும் என்று பலர் யூகித்த விதம் இதன் வழி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

மேலும், இணைய ‘கருத்துரை’ பக்கத்தின் பதிவாளர் என்ற முறையில்தான் இது பற்றி தாம் பேசுவதாகவும் மகாதீரின் ஊடகத் துறை உதவியாளர் என்ற அடிப்படையில் அல்ல என்றும் காதிர் ஜாசின் குறிப்பிட்டார்.

பொதுதேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னர் தான் மகாதீருக்கு வழங்கப்பட்ட பட்டத்தையே கிளாந்தான் சுல்தான் பறித்தார். இது மகாதீரை கிளாந்தான் அரண்மனை புறக்கணிக்கிறது என்பதைக் காட்டுகிறது. இப்போது கிளாந்தான் சுல்தான் அவர்கள்தான் பேரரசராக இருக்கிறார் என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker