Latestமலேசியா

‘லக்சா’ நச்சுணவு 61 பேரிடம் மருத்துவ சோதனை!- சுகாதார அமைச்சு

கோலாலம்பூர், அக்.11- லக்சா உணவை உண்டு நச்சுணவால் பாதிக்கப்பட்டுள்ள 61 பேரின் மருத்துவ சோதனை முடிவிற்காக சுகாதார அமைச்சு காத்திருக்கிறது என்று அவ்வமைச்சின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.

அந்த மருத்துவ சோதனை முடிவுகள் வெளியிடப் படவிருக்கும் வேளையில், அந்த 61 பேரும் உண்ட லக்சா மீ-யில் நச்சு கலந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப் படுவதாக அவ்வமைச்சின் அதிகாரி ஒருவர் தகவல் கூறியுள்ளார்.

சமைக்கப்படாத லக்சா மீயை, சிலாங்கூரிலுள்ள கடை ஒன்றிலிருந்து ஒருவர் வாங்கி வந்துள்ளார் என்று அந்த அதிகாரி சொன்னார்.

“வாங்கி வந்த அந்த மீயை அவர் தனது குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார். அதன் பின்னர், அதை அக்குடும்பத்தினர் சமைத்து பரிமாறியுள்ளனர்” என்று அவர் கூறினார்.
அந்த மீயை மட்டும் தான், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கடையிலிருந்து வாங்கி வந்துள்ளார். மற்ற சமையல் பொருட்கள் மற்றும் சமையல் வகைகளை அக்குடும்பத்தினர் வெளியிலிருந்து வாங்கவில்லை என்று தங்களுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

அந்த லக்சா மீயை, விருந்து நிகழ்வு ஒன்றில் சுமார் 20 பேர் சாப்பிட்டுள்ளனர். அந்த உணவை சாப்பிட்டவர்களில் பலர், நச்சுணவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர், கடுமையாக பாதிக்கப் பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதனிடையில், நச்சுணவால் பாதிக்கப்பட்ட வழக்குகளையும், பனிப்பாறை கீரையையும் சம்பந்தப் படுத்தி சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப் பட்டு வருகின்றன.

பகிரப்படும் அத்தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கெடா மாநிலத்தில் லக்சா உணவை பரிமாறிய உணவகத்தை தாங்கள் துரிதமாக சோதனை செய்துள்ளதாகவும், அந்த லக்சாவில் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கும், பனிப்பாறை கீரைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சுகாதார பொது இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெளிவுப் படுத்தினார்.

லக்சா உணவை உண்டு நச்சுணவால் நாடு தழுவிய நிலையில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 பேர் கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 16 பேர் பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 21 பேர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker